நீதியின் தேவன் இயேசு

இந்த லெந்து நாட்களில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்து நமக்காக பாடுபட்டதையும், கல்வாரி சிலுவையிலே தம்முடைய ரத்தத்தை சிந்தினதையும் நாம் தியானித்து வருகிறோம். சிலுவையில் தொங்கிய இயேசுவின் கைகளும், கால்களும் ஆணிகளால் அடிக்கப்பட்டது. தலையிலே முள் கிரீடத்தை வைத்து அழுத்தினார்கள். அவரது சரீரத்தில் எல்லா இடங்களிலும் ரத்தம் வழிந்தோடியது.ஆனால் இயேசு சிலுவையில் மாத்திரம் வேதனையை அனுபவிக்கவில்லை. சிலுவைக்கு முன் கெத்செமனே தோட்டத்தில் வைத்தும் மரண வேதனையை அனுபவித்தார் என்று வேதாகமத்தில் மாற்கு சுவிசேஷத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டு உள்ளது.

பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொன்னார் (மாற்:13:33,34).மிகுந்த வியாகுலம் மட்டுமல்ல.ஆத்துமாவிலே மரணத்துக்கேதுவான துக்கம் அடைந்திருந்தார் என்று பார்க்கிறோம்.


சிலுவையை சந்திக்கும் முன்னரே கெத்செமனே தோட்டத்தில் சிலுவை மரணத்திற்கு நிகரான மரண வேதனையை சந்தித்தார் என்று பார்க்கிறோம்.இவ்வளவு ஆத்தும வேதனை மற்றும் மரண அவஸ்தைகளை அவர் அனுபவித்ததன் காரணம் என்னவென்றால் அந்த மரணத்தின் மூலம் இந்த உலகத்தில் கொண்டுவர நினைத்த ஆசீர்வாதமே. மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காக சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். ஆதாம் மூலம் மனுக்குலத்திற்குள் வந்த சாபம், நியாயப்பிரமாணத்தினால் மனுக்குலத்திற்கு வந்த ஆக்கினை என எல்லா சாபங்களிலும் இருந்து நம்மை விடுவிக்கும்படியாக நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்(2கொரி:5:21).

நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்(1பேது:2:24). சிலுவையை மாத்திரம் இயேசு சுமக்கவில்லை. ஆத்தும வியாகுலத்தை மாத்திரம் சுமக்கவில்லை. இயேசு முழு உலகத்தின் பாவத்தையும் சிலுவையில் சுமந்தார். நாம் நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு அவர் நம் பாவங்களை சுமந்தார் என்று வேதம் கூறும் சத்தியத்தை தியானித்து பாவம் நிறைந்த உலகத்திலே நீதியுள்ள வாழ்கை வாழ தேவன் நமக்கு கிருபை தருவாராக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 9 =