நீதிமன்றத்தை அவமதித்த ஸாஹிட் மன்னிப்பு கேட்க வேண்டும்

0

நீதிமன்றத்தை அவமதிப்புச் செய்த குற்றத்திற்காக அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
கடந்த சில தினங்களுக்கு முன் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிளில் சென்று கொண்டிருந்த 8 சிறுவர்களை காரில் மோதிக் கொன்ற வழக்கில் ஒரு பெண்மணியை விடுதலை செய்த ஜொகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஸாஹிட் சுட்டிக்காட்டியதாக அவர் சொன்னார். தமது பொறுப்பற்ற அறிக்கையினால் நீதிமன்றத்தை அவமதித்த ஸாஹிட், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் அவர்.
முன்னாள் துணைப் பிரதமரும் உள்துறை முன்னாள் அமைச்சருமான ஸாஹிட்டின் இந்தச் செயல் பொறுப்பற்ற ஒன்று என அவர் சொன்னார்.
பல விவகாரங்களில் பக்காத் தான் ஹராப்பான் அரசாங்கம் பாரபட்சம் காட்டி வருகின்றது என்ற அடிப்படையற்ற குற்றச் சாட்டுகளை அம்னோ தலைவர் சுமத்திவருவதாக அவர் தெரிவித்தார்.
அதே வேளையில், தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்கான தேமு வேட்பாளர் வீ ஜெக் செங், இந்த விவகாரத்தில் ஸாஹிட்டுக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும் என இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here