நியமான தேர்தலுக்கு பின்… அதிகாரம் திருப்பி அளிக்கப்படும்… மியான்மர் ராணுவம் உறுதி

நாட்டில் நியமான முறையில் தேர்தல் நடத்தப்பட்ட பின், அதிகாரம் திருப்பி அளிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மரில் நேற்று மீண்டும் ராணுவத்தினரால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது. மியான்மர் நாட்டின் முக்கிய தலைவரான அந்நாட்டின் அரசு ஆலோசகர் ஆங் சான் சூச்சி ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். இவரை தவிரவும் நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவரும் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர் மேலும், மியான்மர் நாட்டில் அடுத்த ஓர் ஆண்டுக்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் நடைபெற்ற முறைகேடு காரணமாகவே ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளதாக மியான்மார் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மியான்மர் நாட்டில் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட்ட பின், அதிகாரம் திருப்பி அளிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மர் மூத்த தலைமை தளபதி மின் ஆங் ஹ்லேங் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. ஜனநாயக முறையில் அரசு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அதிகாரம் திருப்பி ஒப்படைக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓர் ஆண்டிற்கு நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்த எவ்வித தகவலும் அதில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தேர்தல் நடத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் ராணுவத்தினரால் ஆட்சி கவிழ்க்கப்படுவது இது முதல்முறை இல்லை. இன்னும் சொல்லப்போனால், 1962 முதல் 2015ஆம் ஆண்டு வரை அங்கு ராணுவ ஆட்சியே நடைபெற்றது. ராணுவத்தின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து ஆங் சான் சூச்சி போராட்டத்தை நடத்தினார். இதன் காரணமாக அவர் 21 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். மக்கள் போராட்டம் காரணமாக மியான்மரில் 2015ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஆங் சான் சூச்சியின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. சட்ட சிக்கல் காரணமாக சூச்சிக்கு நெருக்கமான டின் கியாவ் என்பவர் அதிபரானார். நாட்டில் ஜனநாயக ஆட்சியை அமைக்கப் போராடியதற்காக ஆங் சான் சூச்சிக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. இருப்பினும், இவரது கட்சியின் ஆட்சியில்தான் 7.40 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். இது உலக அரங்கில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × five =