நித்யானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் வழங்கியது இண்டர்போல்

0

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாகக் கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார்.
இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன.
நித்தியானந்தா மீதும் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம், ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்ய குழந்தைகளை துன்புறுத்தியது போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, புகார்களின் அடிப்படையில் அகமதாபாத் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார் நித்யானந்தா. குஜராத்தில் உள்ள அவரது ஆசிரமும் சீல் வைத்து மூடப்பட்டது.
ஆனால் சர்ச்சை, சலசலப்பு என எதுக்கும் அஞ்சாமல் இணையதளம் வாயிலாக சத்சங்கத்தில் தோன்றி தனது சீடர்களிடம் பேசி வந்தார் நித்தியானந்தா. இதற்கிடையே கைலாசா என்ற தனி நாடு ஒன்றை தான் உருவாக்க போவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
இருப்பினும் நித்தியானந்தாவின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பது குஜராத் போலீசாருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அவரது இருப்பிடம் குறித்த தகவலை அறிய குஜராத் காவல்துறை சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போலின் உதவியை நாடியது.
இதனை தொடர்ந்து குஜராத் போலீசாரின் கோரிக்கையை ஏற்று இண்டர்போல், நித்தியானந்தாவிற்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளது. தலைமறைவாக உள்ள நபரின் இருப்பிடம் குறித்த தகவல்களை கண்டறிய, புளு கார்னர் நோட்டீஸ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 4 =