நித்யானந்தாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு

0

ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீட ஆசிரமம் உள்ளது. அவர் மீது பெண் சீடர் ஆரத்திராவ் கொடுத்த பாலியல் வழக்கு ராமநகர் மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கர்நாடக சி.ஐ.டி. போலீசார், நித்யானந்தாவை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். பின்னர் நித்யானந்தாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்தார். இதற்கிடையில், ஆரத்திராவ் கொடுத்த பாலியல் வழக்கில் ராமநகர் கோர்ட்டில் நித்யானந்தா 2 ஆண்டுக்கும் மேலாக ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

இதனால் அவர், ராமநகர் கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தாவிடம் கார் டிரைவராக இருந்த லெனின் கருப்பன் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதுபோல, நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரி லெனின் கருப்பன் கர்நாடக ஐகோர்ட்டில் மற்றொரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய கர்நாடக ஐகோர்ட்டு, நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்திருந்தது.

அதே நேரத்தில் ராமநகர் கோர்ட்டில் நித்யானந்தா மீதான பாலியல் வழக்கு கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தாவின் ஜாமீனை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டு இருந்ததால், அன்றைய தினம் நித்யானந்தாவுக்கு கைது வாரண்டு பிறப்பித்து நீதிபதி சித்தலிங்க பிரபு உத்தரவிட்டு இருந்தார்.

மேலும் இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 4-ந் தேதிக்கு (அதாவது நேற்று) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, நித்யானந்தா மீதான பாலியல் வழக்கு நேற்று ராமநகர் கோர்ட்டில் நீதிபதி சித்தலிங்க பிரபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நேற்றும் நித்யானந்தா விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதையடுத்து, வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருவதால் நித்யானந்தாவின் சொத்துகள் முடக்கப்படும் என்று நீதிபதி சித்தலிங்க பிரபு எச்சரித்தார். மேலும் நித்யானந்தாவுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்களையும், அவரது ஆசிரமத்திற்கு சொந்தமான சொத்து விவரங்களையும் அடுத்த விசாரணையின் போது கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிபதி சித்தலிங்க பிரபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கின் விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் நித்யானந்தாவின் சொத்துகளை முடக்குவது குறித்து ராமநகர் மாவட்ட கலெக்டருக்கு நீதிபதி உத்தரவிடலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், நித்யானந்தா சாமியாரை கைது செய்ய சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே நித்யானந்தாவை கைது செய்ய சி.ஐ.டி. போலீசார் மத்திய அரசின் மூலமாக ப்ளூ கார்னர் நோட்டீசு பிறப்பித்திருந்தனர். இந்த நிலையில், நித்யானந்தா வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுவதால், அவரை சர்வதேச போலீசாரின் உதவியுடன் கைது செய்ய சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்காக மத்திய அரசின் மூலமாக சர்வதேச போலீசாரின் உதவியை நாட நித்யானந்தாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசு பிறப்பிக்க கோரி சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கர்நாடக சி.ஐ.டி. போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × five =