நிதியமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்க சொத்தை விற்கவில்லை

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தபோது எந்தவொரு அரசாங்கச் சொத்துகளையும் விற்றதில்லை என்று லிம் குவான் எங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த நாடாளுமன்றத்தில் ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். நான் நிதியமைச்சராக இருந்த காலத்தில் எந்தவொரு அரசாங்கச் சொத்தையும் விற்பதற்கு அனுமதி வழங்கவில்லை.
மற்ற அமைச்சுகளின் மூலம் சொத்துகள் விற்கப்பட்டுள்ளன. ஆனால், நான் நிதியமைச்சராக இருந்த நிதியமைச்சில் இல்லை. ஆகவே, நிதியமைச்சை குறைசொல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அரசாங்க சொத்துகள் விற்பனை தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் கேள்விகளைக் கேட்டனர்.
சொத்துகளை விற்ற அமைச்சர்களின் பெயர்களை அம்பலப்படுத்துங்கள் என்று லிம் குவான் எங்கைப் பார்த்து கெடா பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் கேள்வி எழுப்பினார்.
தேசிய கருவூலத்தில் இடம் பெற்றிருந்த ஐஎச்எச் ஹெல்த்கேர் பெர்ஹாட், மிட்சூய் கோ லிமிடெட் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது தொடர்பில் பேராக் பாசீர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தாஜுடின் ரம்லி கேள்வி எழுப்பினார்.
இதை விற்கும் முடிவை நிதியமைச்சு எடுக்கவில்லை. மாறாக பொருளாதார விவகார அமைச்சு எடுத்தது. வேண்டுமானால் கோம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை கேளுங்கள் என்றார்.
அப்போது டத்தோஸ்ரீ அஸ்மின் அலி எழுந்தபோது நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் பொருளாதார அமைச்சராக இருந்த அஸ்மின் அலி இப்போது புதிய அரசாங்கத்தில் அனைத்துலக வாணிபத் தொழில்துறை அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =