நான்கு மொழி கற்ற சீன மொழி ஆசிரியர் அஷ்டலட்சுமி

சிலாங்கூர் சுங்கை பூலோ (ஆர்ஆர்ஐ) புது கிராமத்தில் பிறந்து வளர்ந்த அஷ்டலட்சுமி சுபாஷ் சந்திர போஸ் அங்குள்ள சீனப் பள்ளியொன்றில் சீனமொழி ஆசிரியராகப் பணியாற்றி வரும் நிலையில், நான்கு மொழி கற்ற ஒரு மலேசியராகவும் உள்ளார். இந்திய தேசியத்தின் மிகவும் போற்றுதலுக்கு உரிய தேசியவாதியான சுபாஷ் சுந்தி ர போஸ் என்ற பெயரே அஷ்டலட்சுமியின் தந்தைப் பெயராக உள்ளது நம்மை சிந்திக்கவைக்கிறது. சீன மொழி ஆரம்பப்பள்ளியில் கல்வி பயின்ற அவர் இடைநிலைப்பள்ளியிலும் சீனமொழியை தேர்வுப் பாடமாக எடுத்து எஸ்பிஎம் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு சென்று பயிற்சி பெற்ற ஆசிரியராகவும் பணியாற்றும் இவர் தேசிய மொழி, சீன மொழியுடன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்கு எழுதப்படிக்கத் தெரிந்துள்ளார்.
பெற்றோர்கள் தம்மை சீனப்பள்ளிக்கு அனுப்பி வைத்தாலும், தாய்மொழி தமிழை மறவாமல் சிறப்பு வகுப்புக்கு அனுப்பி வைத்ததால், இன்று தமிழிலும் சரளமாகப் பேசவும் எழுதவும் முடியும் என்கிறார் அஷ்டலட்சுமி. இந்நிலையில், மலேசிய மண்ணில் பிறந்த மாணவர் ஒருவர் பல்மொழித் திறனைப் பெற்றிருக்கும் போது அவர் உலகில் எங்குச் சென்றாலும் நம் நாட்டுக்குப் பெருமையை தேடித்தர முடியும் என்கிறார் அஷ்டலட்சுமி.தற்போது சுங்கை பூலோவில் மாணவர்களுக்காக மேண்டரின் மொழியில் சிறப்பு வகுப்பு நடத்தி வருவதாகவும் கூறிய அவர், எந்த மொழிப்பள்ளியில் படித்தாலும் அவர்களுடைய தாய்மொழியை மட்டும் மறக்கக்கூடாது. அப்படி மறந்தால் அவர்கள் பெற்றத் தாயை மறப்பதற்கு ஒப்பாகும் என அஷ்டலட்சுமி மனம் திறந்து பேசினார்.
ஒரு லோரி ஓட்டுனரை வாழ்க்கைத் துணைவராகக் கைபிடித்த இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், நாட்டின் 63 ஆம் ஆண்டு தேசிய தினத்தை முன்னிட்டு தமது குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு தெலுக் இந்தானில் அமைந்துள்ள நகரத்தார்களின் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில், பேரா நதிக்கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதன் கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கும், வரலாற்றுப் பூர்வமான மணிக்கூண்டு வளாகத்திற்கும், வருகைத் தந்துள்ளதாகவும் அஷ்டலட்சுமி தமிழ் மலரிடம் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், இவ்வாண்டு பொது நடமாட்டக் கட்டுப்பாடு காரணமாக பொது நிகழ்ச்சிகளை அரசாங்கம் ரத்து செய்துள்ள போதும், மக்கள் இடைவெளியைக் கடைப்பிடித்து சுதந்திர நாளை கொண்டாடத் தவறவில்லை என்பது நிதர்சனமாகும் என்றார் அவர். அடுத்த ஆண்டு கொரொனோவில் இருந்து நாடு முற்றாக விடுதலைப் பெற்றால், கடந்தக் காலம் போன்று நாடு தழுவிய நிலையில் 64 ஆம் ஆண்டு தேசிய தினத்தை சிறப்பாக கொண்டாட மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஒத்துழைப்பு நீடிக்க வேண்டும் என்று அஷ்டலட்சுமி அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × one =