நான்கு பேரைச் சுட்டுக் கொன்ற அராஜகத்திற்கு பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்!

கடந்த டிசம்பர் 25ஆம் தேதி சுங்கை பூலோவில் நான்கு இந்திய இளைஞர்கள் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காரில் சென்ற அவர்கள், போலீசாரின் உத்தரவுக்கு இணங்க நிற்காமல் சென்றதை அடுத்து, போலீசார் அவர்களைத் துரத்திச் சென்றனர்.
விபத்தில் சிக்கித் தடுக்கப்பட்ட பின்னர், காரில் இருந்து வெளியேறிய ஒருவன், கத்தியால் போலீசாரைத் தாக்க முற்பட்டபோது, தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு போலீசார் அவர்களைச் சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப்படுகிறது.
வழக்கம்போல அதற்கான விளக்கத்தை போலீசார் வழங்கி வழக்கை மூடக் கூடாது. அதற்கான முழுமையான விளக்கம் வேண்டுமென்று பினாங்கு முதலமைச்சர் பேராசிரியர் பி.ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.
அது சம்பந்தமான விசாரணை பாரபட்சமில்லாமல் நடத்த வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். போலீசாரால் கொள்ளையர்கள் சுட்டு விழ்த்தப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் நூற்றுக் கணக்கான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதை மறக்க இயலாது.
அதற்கு போலீசாரின் வழக்கமான அறிக்கை மட்டுமே தரப்பட்டு அவை மூடப்படுகின்றன. அதற்கு முழுமையான விசாரணை நடத்தப்பட்டதா என்பது சந்தேகமே!
மேலும், இன ரீதியாக சந்தேக நபர்கள் சுடப்படுவதாகப் புகார்களும் பெறப்படுகின்றன. அப்படி நடந்திருந்தால் அது அநியாயமே! குற்றச் செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகள் காரணமாக இளைஞர்கள் ஈடுபடுவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
கொள்ளையர்களை விருப்பம் போல சுட்டு வீழ்த்துவதால்,
குற்றத்தைத் தடுக்க முடியுமா?
இந்நிலையில், போலீசார் குற்றத்தை இவர்கள்தான் செய்தார்கள் என்று தீர்மானித்து தண்டனை கொடுப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? இயற்கை நியதியின்படி சந்தேக நபர்களைக் சுடுவது இறுதியான நடவடிக்கையாக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது. அதனை போலீசாருக்கு உணர்த்துவது யார்?
போலீசாரின் தன்னலமற்ற சேவையை ஆதரிக்கும் நாம், அவர்கள் அத்துமீறி நடந்து தம்மூப்பான காரியங்களில் இறங்குவதை ஆதரிக்க முடியாது.அவர்களின் நடவடிக்கைகளைக் காண்காணிக்கவே போலீசாரின் நன்னெறி கட்டுப்பாட்டு புகார் ஆணையத்தை (ஐபிசிஎம்சி) அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு ஆதரவளித்த போலீஸ் தலைவர் அப்துல் ஹமிட் படோர், பின்னர் அதிலிருந்து பின் வாங்கியுள்ளார். போலீசார் தங்களின் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி நடந்தால், ஐபிசிஎம்சியை கண்டு அச்சப்படத் தேவையில்லை என்று ராமசாமி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here