நாட்டை மேலும் குழப்பாமல் அரசியலில் இருந்து விலக வேண்டும் துன் மகாதீர்

95 வயதை எட்டிய துன் மகாதீர் இரு முறை பிரதமராகப் பதவி வகித்த பின்னரும், தொடர்ந்து அதற்காக முயற்சி செய்து வருவது மக்களின் வெறுப்பை அதிகரித்து வருகிறது.
முதல் முறையாகப் பதவியில் இருந்தபோது பல்வேறு குளறுபடிகளைச் செய்து நாட்டை நிர்மூலமாக்கிய பின்னர், இரண்டாவது முறையில் பக்காத்தான் ஹராப்பானுக்கு துரோகம் இழைத்து பதவியை அன்வாருக்கு வழங்காமல் இழுத்தடிப்பு செய்த பின்னர், பதவி விலகி ஆட்சி கைமாறுவதற்கு அவரே காரணமாகி இருக்கிறார்.
தமது குற்றங்களுக்குப் பொறுப்பேற்காமல் மற்றவர்களின் மீது குறை சொல்வது அவரின் வழக்கமான செயலாகும். ஆயினும், அவரது காலத்தில்தான் பல்லினங்களின் இணக்கப் போக்கு படு பாதாளத்துக்குச் சென்றதை மறந்து விடக்கூடாது. இன, சமய சகிப்புத் தன்மை சரிந்ததோடு, அது இன்னும் தொடர்வது துரதிருஷ்டமே.
2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வென்றால் தாம் பிரதமராகி, ஈராண்டுகளுக்குப் பின்னர் பதவியை அன்வார் இப்ராஹிற்கு மாற்றித்தர உறுதி கூறியதை நம்பி, அன்வார் அதற்கு சம்மதித்தது மாபெரும் தவறு என்று இப்போது உணரப்படுகிறது.
தொடக்கத்திலிருந்து அவர் அன்வாரை பிரதமர் பதவியை ஏற்க விடாமல் இடையூறுகளை ஏற்படுத்தி வந்துள்ளார். அவரின் சதிச் செயல் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் அது அவரின் மனதில் ஆழப் பதிந்துள்ளது இப்போதுதான் தெரியவருகிறது.
பிரதமர்களில் தாமே பெரிய சாதனைகளைச் செய்திருப்பதாகவும் தாம் இல்லாவிட்டால், நாட்டை ஆள ஆளில்லை என்ற இறுமாப்பு அவரிடம் இன்னமும் உள்ளது. தாம் தவறே செய்யாத பிரதமர் என்று இன்னமும் மார் தட்டி வருகிறார்.
இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவி வகிக்கும் காலத்தில் பல முறை, தமக்குப் பின்னர் அன்வார்தான் பிரதமர் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆயினும், அவரின் மனதில் அன்வார் அப்பதவியில் அமரக்கூடாதென்றே எண்ணி வந்துள்ளார்.
முஹிடின் யாசினும், அஸ்மின் அலியும், ஆட்சியில் ஊழல்வாதிகளான அம்னோ தலைவர்களைச் சேர்த்துக் கொள்ள நெருக்குதல் கொடுத்த பின்னர், தன்னை பிரதமராக்கிய பக்காத்தானிடம் கலந்தாலோசிக்காமல் பதவியைத் துறந்து, ஆட்சி கவிழ வழிவகுத்தார்.
அதன் பின்னர், ஒற்றுமை அரசை உருவாக்க அவர் பெரிதும் முயன்று, தோல்வியுற்றார். அவரின் நோக்கமே அரசியல் கட்சிகளைச் செல்லாக் காசாக ஆக்கி, எல்லா அதிகாரத்தையும் தாமே எடுத்துக் கொண்டு, தன்மூப்பாக ஆட்சி செய்வதே ஆகும்.
அவர் தன்மூப்பாகப் பதவி விலகியதை அடுத்து, மக்களின் நன்மதிப்பையும் இழந்துள்ளது வெள்ளிடைமலை. மக்கள் இனி அவரை நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மையாகும்.
இளைஞர் இயக்கத்தில் துடிப்பாகச் செயலாற்றி வந்த அன்வார், அவரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, அம்னோவில் இணைந்தது பெரும் தவறாகும்.
மேலும், மகாதீரின் வார்த்தைகளை நம்பி அவரை பிரதமராக ஏற்றது, அன்வாரின் இரண்டாவது தவறாகும்.
கொடுத்த வாக்குறுதியை மீறிய மகாதீர், 1990களில் நிதியமைச்சராக அன்வார் திறம்பட பணியாற்றாததால், அவர் பிரதமர் பதவிக்குத் தகுதியில்லாதவர் என்று பிதற்றியும் வருகிறார்.
மகாதீர் இரு முறை பிரதமராகி மக்களை ஏமாற்றியிருக்கும் வேளையில், தமது திறமையை வெளிப்படுத்தும் வகையில் பிரதமர் பதவியை அன்வாருக்கு அளிக்காது ஏமாற்றியது ஏன் என்று ராமசாமி கேள்வி எழுப்பினார்.
அன்வார் போதுமான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் இருப்பதாக மகாதீர் கூறி வருவது ஏன்?
ஹராப்பானின் பிரதமர் வேட்பாளர் அன்வார்தான். தற்போதைய சூழ்நிலையில், அதுவே பொருத்தமான தேர்வாகும். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் மூன்றாவது முறையாக தாமே பிரதமராக மகாதீர் நினைப்பது ஏன்?
அவரின் கட்சியான பெஜுவாங்கில் தற்போது 3 நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர். அதனை வைத்து, இன்னும் பிரதமராவதற்கு அவர் முயற்சிக்கலாமா?
அன்வார் போதுமான பெரும்பான்மையைப் பெற்று, 6 மாத காலத்துக்கு மீண்டும் தாம் பிரதமராக வேண்டுமென்று மகாதீர் வலியுறுத்துவது ஏன்?
இந்நிலையில், மகாதீரின் ஏமாற்று வேலைகளுக்கு இடம் கொடுக்காமல், அன்வார் பிரதமராகும் தமது முயற்சிகளைத் தொடர வேண்டுமென்றும், மகாதீருக்கு நல்வாழ்த்து சொல்லி, அவரை அரசியலில் இருந்து விலகிக் கொள்ள நாமெல்லோரும் வலியுறுத்துவோம் என்று பேராசிரியர் ராமசாமி அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here