நாட்டின் எதிர்காலத்தைப் பணயம் வைக்க வேண்டாம்

    தங்களின் குறிப்பிட்ட உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாட்டின் எதிர்காலத்தையும் மலேசியர்களின் எதிர்காலத்தையும் ஒரு போதும் பணயம் வைக்கக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர்களை மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா அறிவுறுத்தினார்.பதினான்காவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடரின் முதல் கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றியபோது அவர் இந்த அறைகூவலை விடுத்தார். கோவிட்-19 பெருந்தொற்றை ஒழிப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் முழுக் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அந்த தொற்றுக் கிருமிகளிடமிருந்து நாடு இன்னும் மீளவில்லை என்றும் சுட்டிக் காட்டினார். அத்தொற்றினால் விளைந்த சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிகளினால் நாடு திணறிக் கொண்டிருக்கிறது. பலர் தங்களின் வருமானத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் அனுபவித்துவரும் துயரத்தை விளக்கியும் மீண்டும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப மாற்றம் ஏற்பட வேண்டும் எனும் தங்களின் எதிர்பார்ப்பைப் புலப்படுத்தியும் பொதுமக்களிடமிருந்து நூற்றுக்கணக்கான கடிதங்கள் தமக்கு வந்து கிடைத்திருப்பதாகவும் பேரரசர் தெரிவித்தார். ‘குறிப்பிட்ட சில உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாடு மற்றும் மக்களின் எதிர்காலத்தை ஆபத்துக்குள்ளாக்க வேண்டாம் என்று இவ்வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டார். பேரரசரின் இந்த உரை நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளுக்கும் உரியதாகும். மக்களவை சபாநாயகர் அஸார் அஸிஸான் ஹரூண் மற்றும் மக்களவைத் தலைவர் ராய்ஸ் யாத்திமும் நேற்றைய கூட்டத்திற்கு வந்திருந்தனர். கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்தோரின் நினைவாக மௌன அஞ்சலி செலுத்தும்படியும் பேரரசர் கேட்டுக் கொண்டார். பேரரசர் தமது உரையில் நாட்டின் அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசினார். முஹிடின் யாசினுக்குப் பதில் நாட்டின் ஒன்பதாவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து விவரித்த அவர், கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றியே பிரதமர் பதவிக்கு இஸ்மாயிலை நியமித்ததாகக் குறிப்பிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற சத்திய பிரமாண வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டே அந்த நியமனம் தீர்மானிக்கப்பட்டது. இஸ்மாயில் சப்ரிக்கு ஆதரவாக 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாண வாக்குமூல அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர். எந்தவொரு அழுத்தமும் கொடுக்கப்படாமல் அவர்களாகவே முன்வந்து அந்த ஆதரவைத் தெரிவித்தனர். அரசாங்கம் அமைப்பதற்கு அது போதுமானதாகும் என்று பலத்த கரவொலிக்கு இடையே பேரரசர் கூறினார். கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் புதிய அமைச்சரவை தனது முயற்சிகளை இரட்டிப்பாக அதிகரிக்க வேண்டும். குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையிலான திட்டங்கள் மூலம் அதனை எதிர்கொள்ள வேண்டும். முதல் நூறு நாட்களுக்குள் அத்திட்டங்களை அமல்படுத்துவதோடு அதன் வெற்றியையும் உறுதி செய்ய வேண்டும் என்று பேரரசர் கேட்டுக் கொண்டார். பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒற்றுமையுடன் ஈடுபட வேண்டும். இத்தகைய ஒற்றுமையின் வாயிலாகத்தான் ‘மலேசியா குடும்பம்’ கோட்பாடு வெற்றி பெற முடியும் என்றார் அவர். தேசிய மீட்சித் திட்டம், தேசிய தடுப்பூசித் திட்டம் மற்றும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பல பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள் போன்றவை சரியான தடத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் பேரரசர் சுல்தான் அப்துல்லா கூறினார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    7 − four =