நாடாளுமன்றத்தைக் கூட்டும் விவகாரம்; அரசுக்கு அம்னோ 14 நாள் காலக்கெடு


  மாமன்னரின் ஆலோசனைக்கேற்ப கூடிய விரைவில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும்படி அரசாங்கத்தை அம்னோ வலியுறுத்தியுள்ளது. பதினான்கு நாட்களுக்குள் அரசாங்கம் இதனைச் செய்தாக வேண்டும். இல்லையெனில், ஆட்சியாளர்களுக்குப் பெரிய அவமதிப்பை ஏற்படுத்தியதாக அது கருதப்படும் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி நேற்று தெரிவித்தார்.

  இந்த கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் தேவைகளையும் நம்பிக்கைகளையும் வெளிக் கொணர்வதற்கும் அரசு நிர்வாகத்தின் பொறுப்புடைமையை உறுதி செய்வதற்கும் நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்பட வேண்டியது மிக அவசியம் என்று அம்னோ நம்புகிறது. அம்னோவின் இந்த நிலைப்பாடு குறித்து மன்னரிடமும் தெரிவித்திருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
  நாடாளுமன்ற அமர்வு தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள இரண்டு அறிக்கைகளிலும் ‘கூடிய விரைவில்’ மற்றும் ‘உடனடியாக’எனும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதால், அதனை ஒரு சாக்குப்போக்காக அரசாங்கம் கூறக்கூடாது. மாட்சிமை தங்கிய மன்னருக்கும் மலாய் ஆட்சியாளர்களுக்கும் இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளது என்பதைத்தான் அது காட்டுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அமாட் ஸாஹிட் கூறினார்.
  நாடாளுமன்றம் எப்போது கூட வேண்டும் என்பதை மன்னர் வரையறுத்துக் கூறவில்லை என்றும் ஆனால், அக்கூட்டம் செப்டம்பர் மாதம் நடைபெறும் என பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் குறிப்பிட்டுள்ளார் என்றும் பிரதமர்துறை அமைச்சர் ( சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரம்) டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹசான் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  அம்னோவின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதைத் தீர்மானிக்க கட்சியின் உச்சமன்றம் விரைவில் கூடும் என்றும் அமாட் ஸாஹிட் நேற்று தெரிவித்தார். கடந்த வாரம் மன்னருக்கும் மலாய் ஆட்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற இரண்டு மணி நேர சந்திப்பின்போது நாடாளுமன்றக் கூட்டத்தை கூடிய விரைவில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  1 × 5 =