முன்னாள் பிரதமர் நஜிப் நேற்று நீதிமன்ற விசாரணைக்கு வராமல் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டதால் அவருக்கு எதிரான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நஜிப் பேச வேண்டி இருப்பதால் அவரால் வழக்கு விசாரணைக்கு வர முடியவில்லை என அவரது வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா நீதிமன்றத்தில் கூறினார்.
கடந்த காலங்களில் மறைந்த கர்ப்பால் சிங்கிற்கும் இது போன்ற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நீதிமன்ற விசாரணை அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றார் அவர்.
பெக்கான் தொகுதி எம்பி என்ற முறையில் நஜிப், தமது நாடாளுமன்றக் கடமையை ஆற்றச் சென்றிருப்பதால் நீதிபதியிடமும் அரசு தரப்பு வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராமிடமும் தமது மன்னிப்பை கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலை என்று அவர் கூறியிருக்கிறார் என்று அவர் சொன்னார்.
எனினும், நஜிப்பின் இந்த நிலைப்பாடு தாம் ஆட்சேபத்தைத் தெரிவிப்பதாகவும் சட்டத்துறைத் தலைவரின் உத்தரவின் பேரில் தாம் செயல்படுவதாக ஸ்ரீராம் கூறினார்.
நாடாளுமன்ற அவையில் பேச வேறு நாளை முன்கூட்டியே தீர்மானித்திருக்கலாம். நீதிமன்றமும் நாடாளுமன்றமும் ஒன்று மற்றொன்றின் சட்ட அதிகாரத்தில் தலையிட முடியாது. இறுதியாகப் பேசிய நீதிபதி, இதுவே இறுதியாக இருக்கட்டும் என்று கூறினார்.