நாடாளுமன்றச் சேவைகள் மசோதா; அவையின் தன்னுரிமையை மீட்கும்

நாடாளுமன்றத்தின் தன்னுரிமையை மீட்கும் 2020 நாடாளு மன்றச் சேவைகள் மசோதாவை அரசாங்கம் வரும் மார்ச்சில் மக்களவையில் தாக்கல் செய்யும் என்று துணை சபாநாயகர் ஙா கோர் மிங் கூறினார். ஓரியண்டல் டெய்லி என்ற சீனப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஙா கூறுகையில், சட்டத்தை இயற்றும் துறையானது பிரதமர் துறை இலாகாவில் இருந்து தனியாகப் பிரிக்கப்படுவதற்கு இந்த மசோதா வழிவகுக்கிறது என்றார்.

மேலும் இம்மசோதாவின் மூலம் பெரும்பாலான அதிகாரங்கள் பிரிக்கப்பட்டு நாடாளுமன்றம் சுயேச்சையான நிறுவனமாக மாற்றி அமைக்கப்படும். கடந்த காலத்தில் 1963 நாடாளு மன்றச் சேவைகள் சட்டத்தின் கீழ் (பிஎஸ்ஏ) நாடாளுமன்றம் சுயமாகவே பட்ஜெட் மற்றும் பணியாளர்களைச் சேர்க்கும் அதிகாரத்தையும் பெற்றிருந்தது. ஆனால் அச்சட்டம் 1992இல் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

எனினும் கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி இருதரப்பும் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒருமித்த குரலில் அம்மசோதாவை புதுப்பிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். 1963 நாடாளுமன்ற சேவைகள் சட்டம் ரத்து செய்யப் பட்டதிலிருந்து அதிகார பிரிப்பு நிலை தெளிவற்ற நிலையில்தான் இருந்து கொண்டிருந்தது. அதற்கும் மேலாக சட்டத்தை இயற்றும் துறை பிரதமர் துறை இலாகாவின் கீழ் கொண்டு வரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சட்டம் இயற்றும் துறை, நீதித்துறை, செயலாட்சித் துறை ஆகிய 3 துறைகளுக்கும் இடையே ஒன்றுக்கொன்று தலையீடு இருக்கக்கூடாது.

அந்த 3 துறைகளின் அதிகாரங் கள் தனித்தனியே பிரிக்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் நாடாளுமன்ற சேவைகள் மசோதா மறுபடியும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் யப்படுவது மிகவும் அவசியமாகும். இந்த மசோதா வெற்றிகரமாக வரும் மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்டால் நாடாளுமன்றம் மறுபடியும் தனது தன்னுரிமையைப் பெறும் என்று ஙா கூறினார்.
நாடாளுமன்றத்தின் வருடாந்திர வரவு செலவுத் திட்டம் சுமார் 147 மில்லியன் வெள்ளி என்று மதிப்பிடப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =