நாகேந்திரனுக்கு மரண தண்டனை; இறுதி மேல்முறையீடு தள்ளுபடி

எந்நேரத்திலும் தூக்கிலிடப்படலாம்போதைப்பொருள் குற்றத்திற்காக தமக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை எதிர்த்து நாகேந்திரன் கே. தர்மலிங்கம் என்பவர் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை சிங்கப்பூரின் உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
சிறு அளவு ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக மலேசியரான நாகேந்திரன் கடந்தாண்டு சிங்கையில் கைது செய்யப்பட்டார். மறு ஆண்டில் அவருக்குக் கட்டாய மரணதண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் மாதமே அவர் தூக்கிலிடப்படவிருந்தார். ஆனால், நாகேந்திரன் அறிவுத்திறன் குறைபாடுகள் கொண்டவராக இருப்பதால் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல தரப்புகள் கடுமையாக எதிர்த்தன.
இந்நிலையில், முப்பத்து நான்கு வயதான நாகேந்திரன் இறுதி மேல்முறையீடு செய்திருந்தார். மனநலக் குறைபாடுகள் கொண்ட ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றுவது அனைத்துலகச் சட்டத்திற்குப் புறம்பானதாகும் என்று அவரின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
ஆனால், அவரின் மேல்முறையீட்டு விண்ணப்பத்தை சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
அந்த மேல்முறையீட்டு விண்ணப்பம், உண்மையையும் சட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தமது தீர்ப்பில் தெரிவித்தார். உள்நாட்டுச் சட்டத்தை அனைத்துலகச் சட்டம் கட்டுப்படுத்தாது என்றும் அவர் கூறினார்.
நாகேந்திரனின் மேல்முறையீட்டு விண்ணப்பத்தில் சாராம்சம் எதுவும் இல்லை. பல மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும்கூட மலேசிய வழக்கறிஞர்கள் தொடர்ந்து பயனற்ற விண்ணப்பங்களைத் தாக்கல் செய்து கொண்டே இருந்தனர் என்று சுந்தரேஷ் மேனன் குறிப்பிட்டார்.
ஊதா நிறத்திலான சிறைச்சாலை ஆடையையும் வெள்ளை நிற முகக்கவசத்தையும் அணிந்திருந்த நாகேந்திரன் நேற்றைய விசாரணை நெடுகிலும் சோகம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார்.
இந்த வழக்கில் இனியும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் அடுத்த சில நாட்களுக்குள் நாகேந்திரனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என்றும் அவ்வழக்கிற்கு உதவியாக இருந்த மனித உரிமை வழக்கறிஞர் எம்.ரவி தெரிவித்தார்.
இறுதி மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதை அறிந்து எங்கள் குடும்பமே நிலைகுலைந்து விட்டது என்று நாகேந்திரனின் சகோதரி சர்மிளா தர்மலிங்கம் தேம்பியபடி கூறினார்.
எனது சகோதரர் அறிவுத்திறன் குறைபாடு கொண்டராக இருந்த போதிலும், அவரின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறோம்.
நீண்ட காலமாக நடைபெற்றுவந்த இவ்வழக்கு எங்களுக்கு சகிக்க முடியாத ஒரு சோதனையாக இருந்தது என்று மலேசியாவிலிருந்து தொடர்புகொண்டு பேசியபோது சர்மிளா சொன்னார்.
நாற்பத்து மூன்று கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றத்திற்காக நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 21ஆகும். சிங்கப்பூருக்குள் நுழையும் தறுவாயில் அவர் கைது செய்யப்பட்டார். ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய பொட்டலமொன்று அவரின் தொடையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது.
நாகேந்திரனின் நுண்ணறிவுத்திறன் ( ஐகியூ) அளவு 69 என்று கூறப்படுகிறது. அது அறிவுத்திறன் குறைப்பாட்டைக் குறிக்கும் அளவீடாகும். இதனால், அக்குற்றத்தைப் புரியும்படி வேறு யாராவது அவரை மிரட்டிப் பணிய வைத்திருக்கலாம் என்று நாகேந்திரனின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + fourteen =