நன்றே செய்க, அதனை இன்றே செய்க!

0

அடுத்த பொதுத்தேர்தலில் மஇகாவின் தேசியத் தலைவர் ‘அண்ணன்’ விக்னேஸ்வரனுக்கு சிகாமட் தொகுதியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று அண்மையில் சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எட்மன்ட் சந்தாரா கூறியுள்ளார். அப்படி விட்டுக் கொடுக்கும் எண்ணம் உண்மையில் இருந்தால் அதை இப்பொழுதே செய்யலாமே என்று ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார். கோலாலம்பூரில் ‘லிட்டில் இந்தியா’வாக உருவாகி வரும் செந்தூல் ஜாலான் கோவில் ஹிலிருக்கு கடந்த வாரம் வருகை புரிந்த கூட்டரசுப் பிரதேச துணையமைச்சருமான எட்மன்ட் சந்தாரா, மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனை ‘அண்ணன்’ என்ற அடைமொழியுடன் கூறி அவருக்கு தனது சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக் கொடுக்கத் தயார் என கூறியிருக்கிறார்.
கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பிகேஆர் கட்சியின் வேட்பாளராக அவர் போட்டியிட்டார்.
அத்தொகுதியில் அன்றைய மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியத்தை எதிர்த்து அவர் போட்டியிட்டு பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் பிகேஆரிலிருந்து எட்மண்ட் சந்தாரா கட்சித் தாவல் செய்திருந்தாலும், அடுத்த பொதுத் தேர்தல் வரை அத்தொகுதி பிகேஆர் கட்சி வெற்றி பெற்ற தொகுதியாகத்தான் கருதப்படும். 15ஆவது பொதுத் தேர்தலின்போது பிகேஆர் கட்சி இன்னொரு வேட்பாளரைத்தான் நிறுத்தும். சந்தாரா அங்கு போட்டியிட பிகேஆர் நிச்சயம் இடம் கொடுக்காது. அவரே வேட்பாளராக இல்லாத நிலையில் விட்டுக் கொடுக்கவோ தாரை வார்க்கவோ என்ன இருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், சிகாமாட் நாடாளுமன்றம் மஇகாவின் பாரம்பரியத் தொகுதியாகும். மஇகாவின் முன்னாள் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம், முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டாக்டர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம் என்று தொடங்கி மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் வரை சிகாமட்டில் போட்டியிட்டு வந்துள்ளனர். அவ்வகையில், 15ஆவது பொதுத்தேர்தலிலும் மஇகா நிச்சயம் தனது வேட்பாளரை களம் இறக்கும். இந்நிலையில், மஇகாவின் தொகுதியை மஇகாவிற்கு விட்டு கொடுப்பதாக எந்த கட்சியிலும் இல்லாத எட்மண்ட் சந்தாரா கூறுவது அர்த்தமற்றிருக்கிறது.
ஆகவே 15ஆவது பொதுத்தேர்தலுக்கு காத்திருக்காமல் அவர் இப்பொழுதே அத்தொகுதியை ராஜினாமா செய்து அவரது பாசத்திற்குரிய அண்ணன் விக்னேஸ்வரனுக்கு விட்டுக் கொடுக்கலாமே என்று ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.
இந்தியர்களின் கட்சியாக கூறப்படும் மஇகாவின் தேசியத் தலைவராகவும் இந்தியர்களின் சார்பில் ஒரே அமைச்சராகவும் இருந்த டாக்டர் சுப்பிரமணியத்தை ஒதுக்கிவிட்டு சிகாமட் தொகுதி மக்கள் பிகேஆர் கட்சியின் சார்பில் முதன் முறையாக போட்டியிட்ட எட்மன்ட் சந்தாராவை வெற்றி பெற வைத்தனர். ஆனால் அவர்களின் எண்ணங்களையும் தியாகங்களையும் ஒதுக்கிவிட்டு வாக்களித்த மக்களை சிறுமைப்படுத்தும் வகையில் சந்தாராவின் கூற்று அமைந்துள்ளது. மஇகாவின் முன்னாள் உறுப்பினரான அவர், மீண்டும் மஇகாவின் கூடாரத்திற்குள் நுழைந்து கொண்டு மக்கள் மாற்றம் வேண்டும் என்று வாக்களித்து வழங்கிய தொகுதியை மீண்டும் மஇகாவிற்கு தாரைவர்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது மஇகாவின் தேசியத் தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மேலவைத் தலைவர் பதவி காலம் முடிவடைந்து எந்த அரசாங்கப் பதவியும் இல்லாது இருக்கிறார். எனவே, எட்மன்ட் சந்தாரா சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியை மஇகாவிற்கு விட்டு கொடுக்கும் எண்ணம் உண்மையில் இருந்தால், அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இப்பொழுதே ராஜினாமா செய்து அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் விக்னேஸ்வரன் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பு வழங்கலாமே.
அப்படி அவர் வெற்றி பெற்றால் அவர் மஇகாவின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினராவதோடு எட்மன்ட் சந்தாராவின் துணையமைச்சர் பதவியும் விக்னேஸ்வரனுக்கு வழங்கப்படலாம். அல்லது முழு அமைச்சர் பதவி கூட மஇகாவிற்கு கிடைக்கும் வாய்ப்பு அமையும். இந்திய சமுதாயத்திற்கு அது பயனாக இருக்கலாம்.
எனவே, என்றோ செய்வதாக கூறும் நல்லதை இன்றே செய்வது நன்று என ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவரும் தமிழ்மலர் குழுமத்தின் தலைவருமான செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 8 =