நட்புமுறை கால்பந்து; பிலிப்பைன்ஸ் அணியை ஹரிமாவ் மலாயா வெற்றி கொண்டது

புதிய பயிற்றுனர் கிம் பான் கோன் தலைமையில், நட்புமுறை ஆட்டமொன்றில் களமிறங்கிய ஹரிமாவ் மலாயா 2 -0 எனும் கோலில் பிலிப்பைன்ஸ் அணியை தோற்கடித்தது. இந்த இரு அணிகளுக்கான ஆட்டம் சிங்கப்பூர் தேசிய அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கியது முதல் மிகவும் வெறித்தனமான தாக்குதல்களை நடத்திய ஹரிமாவ் மலாயா ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் இடப்புற தாக்குதல் ஆட்டக்காரர் அகியார் ரஷிட் ஒரு கோலை அடித்து ஹரிமாவ் மலாயாவை 1 -0 என முன்னிலையில் வைத்தார்.
இந்த முதல் கோலுக்குப் பிறகு,பயிற்றுனர் பான் கோனின் ஆட்டக்காரர்கள், மேலும் எந்தவொரு தாக்குதல்களையும் நடத்தாமல்,பந்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்தனர். ஆட்டத்தின் 24 -வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டு,ஜேடிடி ஆட்டக்காரருமான அகியார் ரஷிட், ஹரிமாவ் மலாயாவுக்கான இரண்டாவது கோலை அடித்து தமது அணிக்கான வெற்றியை உறுதி செய்தார்.
கால்பந்து தர வரிசையில் 129-வது இடத்தில் இருக்கும் பிலிப்பைன்ஸ் அணியை தோற்கடித்ததன் மூலம், 154-வது இடத்தில் இருக்கும் ஹரிமாவ் மலாயாவுக்கு புள்ளிகள் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இரண்டாவது பாதி ஆட்டத்தில் பல ஆட்டக்காரர்களின் மாற்றம் செய்யப்பட்டும் ஹரிமாவ் மலாயா அணியின் ஆட்டக்காரர்களிடம் எந்தவொரு மாற்றத்தையும் காண முடியாமல் போய் விட்டது.
பல சந்தர்ப்பங்களில் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தும், கோலடிக்கும் வாய்ப்பினை ஆட்டக்காரர்கள் நழுவ விட்டனர். இதனால் நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் உடனான இரண்டாவது நட்புமுறை ஆட்டத்திற்கு முன்னதாக,பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் பயிற்றுனர் குழு செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூருடான இந்த ஆட்டத்திற்குப் பிறகு வரும் திங்கட்கிழமை சிங்கப்பூர் அல்பிரெட்ஸ் நிகாதா எப்சி லீக் கிளப்பை,ஹரிமாவ் மலாயா அணி சந்தித்து விளையாடவுள்ளது.இந்த முதல் வெற்றியானது கொரியாவைச் சேர்ந்த ஹரிமாவ் மலாயாவின் புதிய பயிற்றுனர் கிம் பான் கோன் தலைமையிலான பயிற்சி குழுவினருக்கு புது தெம்பை ஏற்படுத்தியுள்ளது என நம்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + four =