நஜிப் மீதான தீபக்கின் இழப்பீட்டு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

0

தொழிலதிபர் தீபக் ஜெய்கிஷன் நஜிப் ரசாக்கின் மீது தொடுத்திருந்த இழப்பீட்டு வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தீபக் ஜெய்கிஷன்(வயது 48), அவரது சகோதரர் ஜே.ராஜேஸ்(வயது 47) மற்றும் அவர்களின் நிறுவனமான ரேடியண்ட் ஸ்பிளெண்டரின் சார்பில் நஜிப் ரசாக், ரோஸ்மா மன்சோர், வழக்கறிஞர் டத்தோ அமாட் ஜொஹாரி அப்துல் ரஸாக், யாத்ரீகர் வாரியத்தின் முன்னாள் தலைவர் அஸிஸ் அப்துல் ரஹிம், பேங்க் ராக்யாட்டின் தலைவர் டான்ஸ்ரீ ஸுக்ரி முகமட் சாலே ஆகியோர் தங்களது வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டுமென்று கோரியிருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டுமென அவர்கள் முறையீட்டை செய்திருந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஸிமா ஓமார், முறையீட்டு வழக்கின் அம்சங்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கதல்லவென்றும் அந்த மனு முழுமையாக இல்லை, தெளிவாக இல்லை, அதற்கான ஆதாரம் இல்லை என்ற காரணத்தினால் அதனைத் தள்ளுபடி செய்வதாகக் குறிப்பிட்டார்.
நஜிப் தம்பதியருக்கு வழக்கறிஞர் டேவிட் மேத்தியூஸ் ஆஜரான வேளையில், வாதிகள் மூவரின் சார்பில் வழக்கறிஞர் நஸ்பாத் ஹருண் அமாட் ஜொஹாரி ஆஜரானார்.
நஜிப் ரசாக் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தீபக்கின் மீது பேங்க் ராக்யாட் பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவித்ததாக 2018 செப்டம்பர் 12இல் தாக்கல் செய்த அம்மூவரின் முறையீட்டில் குறிப்பிட்டிருந்தனர்.
மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு கொலை சம்பந்தமான சிவில் வழக்கில் தாம் சாட்சியம் அளிப்பதைத் தடுக்கவே அவர் அவ்வாறு செய்ததாக தீபக் ஜெய்கிஷன் குற்றம் சாட்டியிருந்தனர்.
அந்த வங்கியில் தாங்கள் கோரிய 298,888,750 ரிங்கிட் கடனுக்கு பளாஸ்ஸியோ டவர் பி சொகுசு அடுக்குமாடியில் தங்களுக்குச் சொந்தமான 20 வீடுகளை பேங்க் ராக்யாட்டிடம் ஒப்படைக்க வற்புறுத்தி 2008 ஜூலை 24ஆம் தேதியிட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தனர். பிரதிவாதிகள் அனைவரும் இந்த விவகாரத்தில் திட்டமிட்டு, சதி செய்து, சட்ட விரோதமான முறையில் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியதாகவும் அதன் மூலம் தங்களுக்குப் பெரும் நட்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.
அதற்கு இழப்பீடாக ஒவ்வொரு பிரதிவாதியும் தங்களுக்கு தலா 1 கோடியை இழப்பீடாகவும் 2.6 மில்லியனை இதர இழப்பீடாகவும் மேலும் கால நீட்டிப்புக்கான இழப்பீட்டையும் வழங்க வேண்டுமென தங்களது முறையீட்டு வழக்கில் கோரியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − one =