நஜிப் நாட்டுக்கு அழிவையே உருவாக்கினார்!

0

எஸ்ஆர்சி வழக்கில் நீதிமன்றம் தண்டனை வழங்குவதற்கு முன்னர், நஜிப் ரசாக் தமது கருணை மனுவை விண்ணப்பிக்கும்போது மலேசியாவில் சுபிட்சமான சிறந்த சமூகத்தை உருவாக்கப் பாடுபட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
2009இல் அவர் ஆட்சிக்கு வந்த பின்னர், 2018ஆம் ஆண்டு வரை அவர் என்னென்ன தவறுகள் செய்தார் என்பதைச் சொல்லவில்லை என்று செத்தியா வங்சா நாடாளுமன்ற உறுப்பினரும் பிகேஆரின் தலைமைச் செயலாளருமான நிக் நஸ்மி நிக் அமாட் தெரிவித்தார்.
அவரின் காலத்தில் கேள்வி கேட்கும் எதிர்க்கட்சியினர் மீது 1989ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டம், வங்கி மற்றும் நிதித்துறைச் சட்டம் போன்றவற்றை போட்டு அச்சுறுத்தினார். அதில் பிகேஆரின் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி பெரிதும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவரின் காலத்தில்தான் செய்யாத தவறுக்காக அன்வார் இரண்டாவது முறையாகச் சிறையில் அடைக்கப்பட்டார். மேற்கண்ட தவறு பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக் காலத்தில் சரி செய்யப்பட்டது.
அவர் ஒரே மலேசியாவை உருவாக்க அறைகூவல் விடுத்தாலும், இன பிரச்சினைகள் அதிகமானது அவரின் காலத்தில்தான். சிறுபான்மையினர் அச்சுறுத்தப்பட்டு சீனர்களுக்கு என்ன வேண்டுமென்ற கேலியும் அவரின் காலத்தில்தான் எழுப்பப்பட்டது. மேலும், ஆட்சியைத் தற்காத்துக் கொள்வதற்காக,
சீன சமுதாயம் ஆட்சியைப் பிடித்தால் மலாய்க்கார சமூகம் உரிமையை இழக்கும் என்று அச்சம் காட்டப்பட்டது அவரின் காலத்தில்தான்.
அவரின் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக சரிவு கண்டது. இதனிடையே நாட்டை வளப்படுத்த தம்மையே நிதியமைச்சராகவும் நியமித்துக் கொண்டார்.
அவரின் காலத்தில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும் சரிவை அடைந்தது. அவரின் மெகா திட்டங்களினால் அவர் மட்டுமே பயனடைந்தார்.
அவர் வேலை வாய்ப்பை உருவாக்கவும், வாழ்க்கைச் சுமையைக் குறைக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பெரிய நிறுவனங்களுக்கு உதவி செய்து வந்துள்ளார். ஜிஎஸ்டியை அமல்படுத்தி சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை நசுக்கியதுதான் மிச்சம். ஜிஎஸ்டியினால் விலை அதிகரித்தது. வீடுகளின் விலை வானளாவ உயர்ந்ததால், மக்கள் சொந்த வீடுகளை வாங்க முடியாமல் தவித்தனர். 2018 ஆம் ஆண்டு, அவரின் காலத்தில் மலிவு விலை வீடுகளில் வசிக்கும் மக்களின் குழந்தைகளில் 5இல் ஒருவருக்கு போதுமான ஊட்டச்சத்து உணவு கிடைக்காத நிலை இருந்ததாக யூனிசெஃப் அறிவித்தது.
அவர் காலதில் நிர்மாணிக்கப் பட்ட எம்ஆர்டி திட்டங்கள் பெரும் செலவிலும் ஊழல் நிறைந்தும் காணப்பட்டதை, பக்காத்தான் அரசு, கவனமாகத் திட்டமிட்டு அதன் செலவினை வெகுவாகக் குறைத்தது. அவரின் காலத்தில், வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு 1எம்டிபியின் கடனால், நாடு 4,200 கோடி கடனில் தள்ளப்பட்டது. 800 கோடி பங்கு விற்பனையில் வந்த பணம் காணாமல் போனது. அதற்கு அவர் பதில் சொல்வாரா?
இந்தப் பணம் யாவும் கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, நாட்டின் மேம்பாட்டிற்கும் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.
1எம்டிபி நிதி மோசடி நடந்திராவிட்டால், நாட்டின் பொருளாதாரம் சீரடைந்திருக்கும்.
2011ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 50 விழுக்காடாக இருந்தது. 2015இல் அது 53.6ஆக உயர்ந்து,
2018இல் 51.2 விழுக்காடாகக் குறைந்தது. அவரின் காலத்தில் நாட்டின் கடன் 1.104 டிரில்லியன் ரிங்கிட்டைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. (1 டிரில்லியன்= 1 லட்சம் கோடி ரிங்கிட்).
மலாய்க்காரர்கள் மத்தியில் அவரின் தகப்பனார் துன் அப்துல் ரசாக், சிறந்த பிரதமர் என்ற பெயரை எடுத்தவர். ஆனால், அவரின் பிள்ளையோ நாட்டைக் களங்கப்படுத்தியவராகத் திகழ்கிறார். அதிகாரத் துஷ்பிரயோகம், நிதி மோசடி, நம்பிக்கை மோசடி போன்ற குற்றங்களைச் செய்து
தற்போது தண்டனை விதிக்கப்பட்டது வரலாற்றில் நீங்காத இழுக்காக அமையும் என்பது திண்ணம் என நஸ்மி கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 6 =