நஜிப்பின் தீர்மானங்களில் ரோஸ்மாவின் தலையீடு இருந்ததாக உணர்ந்தேன்

0

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் தீர்மானங்களில் அவருடைய துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மாவின் தலையீடு இருந்ததாக கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் மடினா முகமது நேற்றைய இங்குள்ள நீதிமன்ற விசாரணையின் போது கூறினார்.

ஒரு பொது நிகழ்வில். சரவாக் புறநகர்ப் பள்ளிகளுக்கான சூரிய மின் சக்தி உற்பத்தி ஆலை (சோலார்) பொருத்தும் குத்தகையை ஜெபாக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு வழங்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு அனைவரின் முன்னிலையிலும் வெளிப்படையாக கேட்டுக்கு கொண்டதால், தமக்கு இந்த எண்ணம் வந்ததாக மடினா கூறினார்.

அன்றைய தினத்தில் ரோஸ்மாவைப் பரிவாரங்களோடு தாமும் காருக்கு அழைத்துச் சென்ற போது, அவரிடமிருந்து அதே ‘வற்புறுத்தல்’ வந்ததாகக் கூறினார். அத்தோடு அல்லாமல் ரோஸ்மாவின் மகனாகிய ரிஷால் மன்சோரும் பின்னொரு நேரத்தில் அதே நெருக்குதல் அளித்திருந்தார் என்பதால், இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடைமுறைக்கு அப்பால், விநோதமான காரியம் அரங்கேறிக் கொண்டிருப்பதைத் தம்மால் உணர முடிந்ததாக மடினா மேலும் கூறினார். அதாவது ஒரு பிரதமரின் அதிகாரத்தில் அவருடைய துணைவியார் ‘அத்துமீறி’ தலையிடும் முயற்சிகள் வெளிப்பட்டன.

அந்தக் குத்தகை மூலம் ரோஸ்மாவுக்கு ‘ஆதாயம்‘ இருக்கலாம் என்பதால், குத்தகை வழங்கலைத் துரிதப்படுத்த நெருக்குதல் அளிக்கிறார் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. பிரச்சினை இத்தோடு நில்லாமல் ஜெபாக் ஹோல்டிங்ஸின் இயக்குநர் ராயான் ராட்ஸ்வில் அப்துல்லாவும், ஒரு புலனச் செய்தி மூலம், குத்தகை வழங்கலைத் துரிதப்படுத்த நெருக்குதல் அளித்துள்ளார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் அகமது அக்ராம் காரிப், அந்த புலன அரட்டைத் துண்டுகளை (கிளிப்கள்) திரையில் காண்பிக்க விண்ணப்பித்தாலும், அக்கோரிக் கையை ரோஸ்மாவின் வழக்கறிஞர் அக்பர்டின் அப்துல் காடிர் அதை ஆட்சேபித்தார். ஆனால், நீதிபதி முகமது ஸைனி மஸ்லான் அக்ராமின் கோரிக்கைக்கு அனுமதியளித்தார்.

பிப்ரவரி 17ம் தேதி மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், மடினா அதில் தொடர்ந்து சாட்சியமளிப்பார். ரோஸ்மா 187.5 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். ஜெபாக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைடி அபாங் சம்சுடினிடமிருந்து அவர் ஊக்குவிப்புத் தொகையாக அப்பணத்தைப் பெற்றார் என்று கூறப்படுகிறது. 2016-17ம் ஆண்டுகளில் அவர் 6.5 மில்லியன் ரிங்கிட்டைக் கையூட்டாகப் பெற்றார் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here