தொழில் திறன்மிக்கவர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள்

எதிர்காலத்தில் தொழில் திறன் மிக்கவர்களே அதிகமாகத் தேவை என்பதால், மாணவர்கள் அதற்கான பயிற்சியை மேற்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கேட்டுக் கொண்டார். உலகளவில் தொழில்நுட்பம் மற்றும் தொழில் திறன்(டிவெட்) துறைகள் பெருக அதிக வாய்ப்பு இருப்பதால் மலேசியாவிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் நாட்டில் 60 விழுக்காட்டு வேலை வாய்ப்புகள் அத்துறையில் இருக்கும் என கணிக்கப்படுகிறது.

ஜெர்மனியில் தொழில் திறன் பயிற்சி பெற்றவர்கள் 51 விழுக்காடாக இருக்கும் வேளையில், மலேசியாவில் அது 28 விழுக்காடு மட்டுமே என்று குறிப்பிட்ட குலசேகரன், இன்னும் 10 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையை 35 விழுக்காடாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இன்னும் 15 ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களில் போதிக் கப்படும் பாடங்கள் மாற்றப்பட்டு தொழில்திறன் பயிற்சிகளாக ஆக்கப்படும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

தொழில் திறன் பயிற்சி பெற்ற மாணவர்கள் 96 விழுக்காட்டினருக்கு உடனடி வேலை வாய்ப்புகள் கிடைப்பதாகக் குறிப்பிட்ட அவர், மனிதவள அமைச்சின் கீழ் தொழில் திறன் பயிற்சி மையங்கள் கோலாலம்பூர், கோத்தா பாரு, கோல திரெங்கானு, ஸ்கூடாய், ஈப்போ, தைப்பிங், பினாங்கு, தாவாவ் மற்றும் சண்டக்கானில் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அந்த பயிற்சி நிலையங்களில் 70லிருந்து 80 விழுக்காட்டு இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருப்பதால், மாணவர்களின் தேவைக்கேற்ப பயிற்சி நிலையங்கள் இரவு 11 மணி வரை செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த மையங்களில் 2016ஆம் ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 16,000 ஆக இருந்த வேளையில், 2019இல் 18,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அதனை இவ்வாண்டில் 20,000ஆக அதிகரிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குலசேகரன் தெரிவித்தார். பூர்வகுடி மாணவர்களும் அக்கல்வி பெற ஊக்குவிக்கப்படுவதாகவும் கேமரன் மலை, தாப்பா மற்றும் கிரிக்கில் உள்ள பயிற்சி மையங்களில் 17 மாணவர்கள் பயின்று வருவதாக அவர் தெரிவித்தார்.

தொழில் திறன் பயிற்சி சம்பந்தமாக ஆலோசனை வழங்க தமது அலுவலகம் செவ்வாய்க்கிழமைகளில் திறந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 12 =