தொற்றினை எதிர்த்துப் போராட முன்களப் பணியாளர்களுடன் ஒத்துழைப்போம்


பல்வேறு திட்டங்களையும் அரசு செயல்படுத்தினாலும் கோவிட்-19 தொற்று கட்டுக்கடங்காமல் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நாட்டில் ஒரு மில்லியன் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 2500 பேர் மரணமடைந்துள்ளனர். தொற்றிலிருந்து குண மடைவோரின் எண்ணிக்கை 85 விழுக்காடாக இருக்கும் நிலையில், இறப்போரின் எண்ணிக்கை 0.5 விழுக்காடு மட்டுமே.
உலகளாவிய நிலையில் 171 மில்லியன் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு, 153 மில்லியன் பேர் குணமடைந்துள்ளனர்.
மலேசியாவின் இறப்பு விகிதம் 2.6 விழுக்காடு மட்டுமே. இது நம்முடைய முன்களப் பணியாளர்களின் அயராத சேவைகளினால்தான் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர், ஊழியர்கள் நமது வணக்கத்துக்குரியவர்கள். அவர்களின் தன்னலமற்ற சேவையையும் அர்ப்பணிப்பு உணர்வையும் மதிப்பிட வார்த்தைகள் இல்லை. அது விலை மதிக்க முடியாததாகும்.
சக மனிதர்களைக் காக்கும் பொருட்டு தன்னுயிரையும் இழந்திருப்போர் ஆயிரக் கணக்கில் உள்ளனர். அதற்கெல்லாம் ஈடு, இணையேதும் உண்டா?
கடந்த 14 மாதங்களாக அவர்கள் தங்களின் உடல் நலம், மனநலம் கருதாமல், நோயாளிகளைக் காப்பதில் உண்ணாமல், உறங்காமல் சேவையாற்றியது என்றென்றும் போற்றப்படும் என்பது திண்ணம்.
இந்தத் தொற்று விவகாரத்தில் கண்ணுக்குப் புலப்படாத ஹீரோக்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அதில் பொது மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் அடங்குவர்.
சில நேரங்களில் 7 நாள்களும் வேலைதான். சிலர் தனிமைப்படுத்தப்பட்டு கோவிட்டுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டனர்.
எனினும், தங்களின் தொழில் தர்மத்துக்கு ஏற்றவாறு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தது பாராட்டுக்குரியதாகும்.
அண்மையில், பெரும்பாலோர் குடும்பங்களுடன் சேர்ந்து நோன்புப் பெருநாளைக் கொண்டாட இயலவில்லை. சிலர் கிறிஸ்துமஸ், சீனப் புத்தாண்டு, தீபாவளி, வைசாக்கி, கலாசார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் போனது.
இதற்கு நம்மையே நாம் நொந்து கொள்ள வேண்டும். நமது பொறுப்புகளை உணர்ந்து நாம் செயல்படாததாலும் குறைந்தது 2 லட்சம் பேர், அரசின் விதிமுறையை அலட்சியம் செய்து, மாவட்டம், மாநில எல்லைகளைத் தாண்டிச் சென்றதாலும் தொற்றின் எண்ணிக்கையும் மரண எண்ணிக்கையும் கிடு கிடுவென அதிகரித்துள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் உலவுவோரும் நம்மிடையே உண்டு. இதன் காரணமாகச் சுகாதாரப் பணியாளர்களே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மருத்துவப் பணியாளர்களின் சுமையைக் குறைக்க நம்முடைய எதிர்மறையான போக்குகளை மாற்ற வேண்டும்.
அரசின் வரையறுக்கப்பட்ட நெறிமுறையை வழுவாது பின்பற்றி தொற்றின் எண்ணிக்கையைக் குறைப்போம். தற்போதைய ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது நம்முடைய கையில்தான் உள்ளது.
தொற்றின் பரவலால் அனைத்து மக்களும் துன்பத்தை அனுபவித்தது போதும்.
நாடும் மக்களும் தொற்றிலிருந்து விடுபட முன்னிலைப் பணியாளர்களுக்கு கை கொடுபோம் வாரீர் என சமூகவாதி லீ லாம் தை கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 5 =