தொடரும் நிதி நிர்வாக முறைகேடு புகார்கள்: ஸ்ரீ முருகன் நிலையத்திற்கு 190 மில்லியனா

0

செடிக் விவகாரம் ஒரு புறம் கொழுந்து விட்டு எரியும் வேளையில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசின் கீழ் செயல்படும் மித்ராவின் நிதி பங்கீடு தொடர்பாகவும் பல சர்ச்சைகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் ஊழலுக்குப் போட்டியாக ஊழல் என்பது போல், ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கு எதிராக பல கோடி வெள்ளி அரசு தொகையை பெற்றது தொடர்பாக புகார்கள் பரவி வருகின்றன. இந்த குற்றச்சாட்டு லத்திஃபா கோயாவின் பார்வைக்கும் சென்றுள்ளது என்றும் நம்பப்படுகிறது. ஆவணங்களின் அடிப்படையில் புகார்கள் இருந்தாலும் அது எழுப்பப்பட்டுள்ள நேர ஒற்றுமையை பார்க்கையில் இது செடிக் மீதான புகார்களை திசை திருப்பும் நோக்கில் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏழ்மை கோட்டின் கீழ் உள்ள இந்தியர்களை உருமாற்றம் செய்வதற்காக உருவாக்கப்பட்டது செடிக். அதன் பெயர் மாற்றம் செய்யப்பட்ட அமைப்பாக மித்ரா இருக்கிறது. ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பணியை மேற்கொள்வதற்காக ஸ்ரீ முருகன் சென்டர் அல்லது ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உருவாக்கப்பட்டது. இந்த அனைத்து அமைப்புகளுக்கும் இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த அரசாங்கத்தில் பிரதமர் இலாகாவின் கீழ் செயல்பட்டது செடிக். இந்திய சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடுபோல் செடிக் நிதி நிர்வாகத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளன என அரசாங்கத்தின் தலைமை கணக்காய்வாளர் அண்மையில் தமது அறிக்கையில் தகவல் வெளியிட்டிருந்தார். அது நாடு தழுவிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, கணக்காய்வாளர் அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள புகார்கள் மீது விசாரணை நடத்தப்படும் என ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் லத்திஃபா கோயா தெரிவித்தார்.
அந்த புகார்களைப் பற்றி பரவலாக மக்கள் பேசி வரும் வேளையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கு 66.8 மில்லியனும் அதன் இயக்குனர்களான டான்ஸ்ரீ டாக்டர் தம்பிராஜா மற்றும் சுரேந்திரனை முக்கிய பொறுப்பாளர்களாகக்கொண்ட பெர்துபோஹான் கெமாஜுவான் சோசியல் மலேசியா அல்லது மலேசிய சமூக மேம்பாட்டு அமைப்பிற்கு 129.35 மில்லியனை அரசாங்கம் வழங்கியிருப்பது தொடர்பாக புள்ளி விபரங்களுடன் புகார் செய்யப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அரசாங்கத்தில் உள்ளவர்கள் அல்லது அதன் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே நேரடி புகார்களை வழங்கி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிப்பார்கள்.
ஆனால் தற்சமயம், பெயர் குறிப்பிடாமலே இந்த புகார்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசாங்கத் தகவல் மற்றும் ஆவணங்களுடன் இந்த புகார் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இது அரசாங்கத்தின் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவரது மேற்பார்வையின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக உள்ளது. இந்த புகார்களை தற்சமயம் வெளியிடுவதன் நோக்கம் கேள்விக்குரியதாக இருந்தாலும் தகவல் ஆதார அடிப்படையில் அமைந்துள்ளதால் சமுதாயத்தின் அடுத்த கேள்விக் கணை டான்ஸ்ரீ டாக்டர் தம்பிராஜாவை நோக்கி பாயவுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here