தேர்தல் வாக்குறுதியை பக்காத்தான் துண்டுத்தாளாகக் கருதக்கூடாது

0

தமது தேர்தல் வாக்குறுதியை ஒரு துண்டுத்தாளாக பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கருதக்கூடாது என்பதை தங்களின் வாக்குகள் மூலம் தஞ்சோங் பியாய் வாக்காளர்கள் வெளிப்படுத்திவிட்டதாக ஜசெக சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ கூறினார். தங்களுடைய வாக்குகள் மத்திய அளவில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். இருப்பினும் தேர்தல் வாக்குறுதியை ஒரு துண்டுத்தாளாக கருதிவிடக் கூடாது என்று அவர்கள் உணர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆகையால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கடுமையாகப் பாடுபட வேண்டும். மேலும் மக்கள் எதிர்நோக்கி வரும் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றார் அவர். நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிகாண வேண்டும் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் நாடுமுழுவதும் மலிவு விலை வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.
அதே வேளையில், குறைந்த செலவிலான மருத்துவச் சேவைகளை மலேசியாவில் உள்ள அனைத்து இனத்தவர்களும் எதிர்பார்க்கின்றனர். லைனாஸ், சொஸ்மா, மூன்றாவது தேசியக் கார், பறக்கும் கார் போன்றவற்றில் இந்நாட்டு மக்களுக்கு ஆர்வம் இல்லை என்றார் அவர். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பதாக 2 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட கைது செய்யப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என மலேசியர்கள் எதிர்பார்ப்பதாக ரோனி லியூ தெரிவித்தார்.
அதே வேளையில், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தேவை ஏற்பட்டால், தமது தவறுகளுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + ten =