தேமுவின் 2 கோரிக்கைகளை நிறைவேற்றுவது
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தைப் பொறுத்தது

2021ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தேசிய முன்னணியின் 2 கோரிக்கைகளை நிறைவேற்றுவது பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தைப் பொறுத்தது என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறினார்.
வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு, ஊழியர் சேம நிதி (இபிஎப்) முதல் கணக்கில் இருந்து சந்தாதாரர்கள் பணத்தை மீட்டுக்கொள்வது ஆகிய 2 முக்கிய கோரிக்கைகளை நடப்பு அரசாங்கத்திடம் பலமுறை தேசிய முன்னணி வலியுறுத்தி விட்டதாக அவர் சொன்னார்.
இந்த விவகாரம் தொடர்பாக இவ்வாரத் தொடக்கத்தில் நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அஸிஸுடன் தாம் சந்திப்பு நடத்தியதாக தேசிய முன்னணி முன்னாள் தலைவருமான அவர் சொன்னார்.
இந்த 2 கோரிக்கைகளை உடனடியாக அமலுக்குக் கொண்டு வரும்படி பெரிக்காத் தான் நேஷனல் அரசாங்கத்திடம் தேசிய முன்னணி வலியுறுத்தி விட்டதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும் இது குறித்து எந்தவொரு முடிவும் கிடைக்காத தால், இது தொடர்பான முடிவு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் தலைமைத்துவத்தைப் பொறுத்தது என்றார் அவர்.
இந்த விவகாரத்தில் ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தமது முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார்.
தேசிய முன்னணியின் இவ்விரு கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே, 2021ஆம் ஆண்டு பட்ஜெட்டை தேமு எம்பிக்கள் ஆதரிப்பர்
என கடந்த வாரம் நஜிப் கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =