
அம்னோ- பாஸ் கட்சிகளுக்கிடையே ஒருமித்த தேசிய கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலின் முடிவு நிரூபித்துள்ளதாக மசீச தலைவர் வீ கா சியோங் கூறினார்.
எந்த ஓர் இனத்தையும் ஓரங்கட்டாமல் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை தேசிய ஒருமித்த கூட்டணி மூலம் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் வெற்றியில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
நேற்று தலைநகரில் மசீச பேராளர்கள் மாநாட்டை தொடக்கி வைத்து ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் பேசினார்.
அண்மையில் நடந்து முடிந்த தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி 15,086 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது.
இந்த இடைத்தேர்தலில் மசீச வேட்பாளர் வி ஜேக் சின் வெற்றிக்கு பாஸ் மற்றும் அம்மு கடுமையாக பாடு பட்டதாக அவர் தெரிவித்தார்.
தேசிய ஒருமித்த கூட்டணியின் மூலம் அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுடன் வரும் தேர்தல்களில் மசீச ஒத்துழைக்கும் என அவர் உறுதி அளித்தார்.
இந்த புதிய அரசியல் பல இன மக்களுக்கு இடையிலான பதற்றங்களை தணிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வரும் 15 ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு பதிலாக மக்களை பிரதிநிதிக்கும் சிறந்த கூட்டணியாக தேசிய ஒருமித்த கூட்டணி விளங்கும் என்றார் அவர்.
தேசிய ஒருமித்த கூட்டணியில் மசீச அங்கத்துவம் வகிக்கும் என பாஸ் தலைமைச் செயலாளர் தக்யூடின் ஹாசான் ஏற்கெனவே கூறியிருந்தார்.