தெலுக் இந்தான் சுங்கை தீமா தமிழ்ப்பள்ளி மூடப்பட்டது

சுங்கை தீமா தமிழ்ப்பள்ளியில் மாணவர்களே இல்லாமல் 4 ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்குச் சென்று வந்தநிலையில், அந்த 4 ஆசிரியர்களும் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டதால் சுங்கை தீமா தமிழ்ப்பள்ளி நேற்று இழுத்து மூடப்பட்ட செய்தி வட்டார இந்திய சமூகத்தின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுங்கை தீமா பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஸ்ரீமுருகன், சசெக் தமிழ்ப்பள்ளிக்கு தலைமையாசிரியராகவும், ஆசிரியர் சிவபாலன் நோவாஸ் கோஸியா—1க்கும், ஆசிரியர் புவனேஸ்வரிநோவாஸ் கோஸியா—2க்கும், ஆசிரியர் லாவண்யா ருபானா தமிழ்ப்பள்ளிக்கும் மாற்றம் செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சுங்கை தீமா தமிழ்ப்பள்ளி ஒரு ஆசிரியரும் இல்லாமல் காட்சி அளிக்கிறது. கீழ்ப்பேரா மாவட்டத்தில் மொத்தம் 6 தமிழ்ப்பள்ளிகள் குறைந்த மாணவர் எண்ணிக்கையிலான பள்ளிகளில் சுங்கை தீமா தமிழ்ப்பள்ளி மூடப்பட்டதில் முதல் பள்ளியாக உள்ளது.
சுங்கை தீமா தமிழ்ப்பள்ளியை எடுத்துக் கொண்டால், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப் பட்ட ஒரு தோட்டப்பள்ளியாகும்.
தொழிலாளர்கள் நகர்ப் புறங்களுக்கு குடிபெயர்ந்துள்ளதால், அங்கு மாணவர்கள் இல்லாமல் அப்பள்ளி கடந்த 15 ஆண்டுகளாகவே 10 முதல் 5 மாணவர்கள் மட்டுமே கல்வி கற்று வந்துள்ளனர்.
அந்நிலையில், மறைந்த பாசீர் சாலாக் தொகுதி மஇகா தலைவர் எஸ்.தங்கராசு இப்பள்ளியின் அனுமதியை இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லங்காப் சிற்றூருக்கு கொண்டுச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபாடு காட்டி வந்துள்ளார். ஆனால், பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாமல் ஆகிவிட்டது.
பல காலமாக இப்பள்ளி குறைந்த மாணவர்கள் பிரச்சினையை எதிர்கொண்டு வந்தபோதும், பேரா மஇகா தலைமையும் அதன் கல்விக்குழுவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வாயை மூடிக்கொண்டிருப்பது ஏன் என்று சமூகத்தின் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது என்றும் தமிழ் மலரிடம் தெரிவித்தனர்.
எப்படியாவது இப்பள்ளியை இழுத்து மூடுவதில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வந்துள்ள கல்வி அமைச்சு, மாற்று இடத்திற்கு கொண்டு செல்லும் அவசியமும், அவசரமும் அமைச்சுக்கு இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
இது சம்பந்தமாக சமுதாய ஆர்வலர்கள் ஒன்றுகூடி சுங்கை தீமா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராக வேண்டும் என்று ஏபி.முனியாண்டி, கதிரவன், துரைசாமி, பொன்னம்மாள், மாரியம்மாள், முத்து, அப்பளசாமி, இராஜகோபால், டத்தோ இராமச்சந்திரன், பெருமாள், முனுசாமி, மைதின், மோகன், ராஜன் மற்றும் குப்பன் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − four =