துப்புரவுத் தொழிலாளர்களின் கைது; வெட்கக் கேடானது!

0

வட மாநிலங்களில் செயல்பட்டு வரும் மருத்துவமனை துப்புரவுத் தொழிலாளர்களின் தேசிய சங்கத்தைச் சேர்ந்த 5 அதிகாரிகளைப் போலீசார் கைது செய்திருப்பது வெட்கக்கேடான செயலென்று மரியா சின் அப்துல்லா சாடியுள்ளார்.
நேற்று முன்தினம் சில கோரிக்கைகளை முன்வைத்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த 5 பேரைக் கைது செய்திருப்பது சங்கத்தை நசுக்கும் செயலென்று வர்ணித்த அவர், அது நியாயமற்ற, அரக்கத்தனமானது என்றும் முன்னிலைப் பணியாளர்களின் சேவையை உதாசீனம் செய்வதற்கு ஒப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று, ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு எதிரே அமைதி மறியலில் ஈடுபட்ட அச்சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் எம்.சரஸ்வதி உட்பட ஐவரை போலீசார் கைது செய்து, அவர்களின் மீது குற்றவியல் சட்டம், பிரிவு 186, பிரிவு 269, அபாயகர தொற்று நோய்ச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் சுமத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட அவர்கள் தங்களது குத்தகையாளரான யுஇஎம் எஸ் எட்ஜென்டா நிறுவனம், பாதுகாப்புக் கவசங்களை தருவதில்லை, ஊழியர்களின் வேலை நேரத்தை அடிக்கடி மாற்றி சிரமத்தைத் தருவதாகவும், தங்கங்களின் சங்கத்திற்கு உரிமையைத் தராமல் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
ஊழியர்களின் பாதுகாப்புக்கு அனைத்தும் வழங்கப்பட்டிருப் பதாகவும், அதிருப்தியைத் தெரிவிக்க அதிகாரப்பூர்வ வழிகள் இருக்கும் போது, ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையற்றது என்றும் யுஇஎம்எஸ் எட்ஜென்டா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மரியா சின் மேலும் குறிப்பிடும்போது, கைது செய்யப்பட்டவர்களைப் போலீசார் எந்த நிபந்தனையுமின்றி, விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, சங்கத்தின் அதிகாரிகளைக் கைது செய்த நடவடிக்கையை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ள மரியா சின் அப்துல்லாவுடன் மலேசிய சோஷலிச கட்சி, சுவாராம், ஜனநாயக மக்கள் இயக்கம், அலிரான் ஆகியவை கைது செய்யப்பட்டோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − 3 =