துன் மகாதீர் அரசியலைவிட்டு விலகிச் செல்வதே சாலச் சிறந்தது

துன் மகாதீருக்கு வயது அதிகமாகிவிட்டது. அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். அவருக்கு ஞாபக சக்தி குறைய அவரின் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். தெளிவான முடிவை எடுக்க முடியாத ஒரு நிலை அவருக்கு. இப்போது அவர் சிறுபிள்ளைகள் போல குறும்புத்தனம் செய்துகொண்டிருக்கிறார்.
துன் மகாதீரை நம்பி மக்கள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்கு அளிக்கவில்லை. அரசாங்கத்தை மாற்றியமைக்க வேண்டும் என்னும் ஒரே குறிக்கோள்தான். அதனால்தான் பக்காத்தான் ஹராப்பான் துன் மகாதீரைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தபோது பலருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் மகாதீரை ஏற்றுக்கொண்டனர்.
துன் மகாதீர், தான் செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, இனி அப்படி எந்தத் தவறும் நடைபெறாது என உறுதி கூறியிருந்தார். இந்தியர்களின் வாழ்க்கைக்கு நல்ல எதிர்காலம் அமைத்துத் தருவதாகவும் வாக்குறுதி தந்தார். அதனால்தான் நமது இந்திய இளைஞர்கள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றிபெற பல வழிகளில் உறுதுணையாக இருந்தனர். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது.
மகாதீர் இரண்டு வருடத்தில் தனக்குப் பின்னால் அன்வார் பிரதமராவார் எனப் பொது மக்களிடம் பகிரங்கமாகப் பல இடங்களில் கூறியிருக்கிறார். அவர் கூறிய வார்த்தைகளை அவரே காற்றில் பறக்கவிட்டுவிட்டார்.
அவரின் நடவடிக்கைகள் பக்காத்தான் ஹராப்பானுக்குத் துரோகம் செய்துவிட்டது போல இருக்கிறது. அன்வார் பிரதமராக வரவே கூடாது என அவர் முடிவெடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தான் பதவியில் இல்லாமல் இருந்தபோது யாரும் அவரை கவனிக்கவில்லை. மக்களால் அவர் மறக்கப்பட்ட நிலையில் இருந்தார். பதவிக்கு வந்ததும் அவருக்கு உலக அளவில் பாராட்டும் மதிப்பும் ஏற்படும்போது தனது பிரதமர் பதவியைத் துறக்க அவருக்கு மனம் வரவில்லை. மக்களுக்கு அவர் கொடுத்த வாக்கைவிட அவருக்கு அவரின் சுயநலமே மேலோங்கி இருந்தது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகிக்கொண்டது ஏன்? அனைவருக்கும் ஒரே புதிராகவே இருக்கிறது.
தனக்குப் பிரதமர் பதவி வேண்டாம் என்றால் அதனை டத்தோ ஸ்ரீ அன்வாரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். அதைவிடுத்து பதவியை ராஜினாமா செய்தது உண்மையில் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு செயல்.
இப்போது மீண்டும் பிரதமராக வேண்டும் என ஆசைப்படுவது நம் நாட்டு மக்களையெல்லாம் முட்டாள்களாக்குவதற்குச் சமம். மக்களுக்குத் துன் மகாதீரைப் பற்றி தெரிந்துவிட்டது. அவரை நம்பி அவர் பின்னால் போக முடியாது. அவர் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கூட்டணி நிச்சயம் தோல்வியடையும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.
மகாதீருக்கு இப்போது கட்சியே இல்லை. இந்த நிலையில் மீண்டும் பிரதமராகும் எண்ணம் தோன்றுவதில் எந்த நியாயமும் இல்லை. அவர் பேசாமல் வீட்டிலேயே இருப்பது நல்லது. மக்களிடையே அவருக்கு செல்வாக்கு இல்லை. குறிப்பாக, இந்தியர்களிடையே அவருக்கு ஆதரவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மேஜர் அ.முனுசாமி
தைப்பிங் எழுத்தாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =