துன் மகாதீரை அரசியலில் இருந்து ஒதுக்க முடியாது!

கடந்த வாரம் பெரும் இழுபறிக்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கலைக்கப்பட்டு, பிரிபூமி பெர்சத்து, அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள் அடங்கிய பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் ஆதரவோடு டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆட்சிக் கவிழ்ப்புக்கு முக்கிய காரணமாக துன் மகாதீர் குற்றம் சாட்டப்பட்டார். அவர் தந்த விளக்கத்தை அடுத்து அவரின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மக்களிடையே முஹிடின், நஜிப் ரசாக், அமாட் ஸாஹிட் ஹமிடி, அன்வார் இப்ராஹிம் ஆகியோரோடு ஒப்பிடுகையில், துன் மகாதீருக்கு செல்வாக்கு அதிகரித்து வருவதாக தாஸ்மானியா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ஜேம்ஸ் சின் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அரசியல் ஆய்வாளர் ரேமன் நவரத்தினம் மற்றும் வட மலேசியா பல்கலைக்கழகத்தின் முகமட் அஸிஸுடின் முகமட் சானி ஆகியோர் மகாதீரை அரசியலில் இருந்து விரைவாக வெளியேற்ற முடியாது என்றும் அவரின் ஆற்றலையும் உத்வேகத்தையும் பரந்த அனுபவத்தையும் ஒதுக்கிவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கால அரசியல் சூழ்நிலையில், ஊழலையும் இன, சமய குழப்பத்தையும் ஒடுக்க மகாதீரின் சேவை நாட்டுக்குத் தேவையாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார் ஆசியான் வியூக தலைமைத்துவக் கழகத்தின் இயக்குநரான ரேமன் நவரத்தினம். நாட்டை சீரமைத்து வழி நடத்த அவரால்தான் முடியும் என்றும் ஆனால், அவரின் வயது சில தடைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். 95 வயது இளைஞர் போல் அவரால் செயலாற்ற முடியாது. ஆனால், இளைஞர்களுக்கு வழிவிட்டு, அவர் ஆலோசனை வழங்கி வழி காட்ட முடியும். பக்காத்தான் தொடர்ந்து இயங்கவும் மலாய்க்காரர்களின் ஆதரவைக் கொண்டு வரவும் மகாதீரின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும் என அஸிஸுடின் தெரிவித்தார்.

மக்களை ஒன்றிணைத்து தன் பின்னால் அணி சேர்க்க அவரால் முடியும் என்றார் அவர். மகாதீர் மட்டுமே மலாய்க்காரர் அல்லாதோரின் நம்பிக்கையைப் பெற தகுதியானவர் என ஜேம்ஸ் சின் குறிப்பிட்டார். பக்காத்தானின் பாதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலாய்க்காரர் அல்லாதோராக இருக்கின்றனர். மகாதீர் தொடர்ந்து பக்காத்தானில் இருந்தால் மட்டுமே மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற முடியும். அம்னோவின் ஊழல் அரசியல் வாதிகளோடு கைகோர்க்க மகாதீர் மறுக்கும் கொள்கையை உறுதியாகக் கொண்டிருப்பதால் மலேசியர்களின் ஆதரவை அவர் பெற்றிருக்கிறார். மேலும், மக்கள் அம்னோவின் மீதும் 1எம்டிபி நிதி மோசடிக்குக் காரணமான நஜிப் ரசாக்கின் மீதும் இன்னும் வெறுப்பைக் கொண்டிருக்கின்றனர். சொந்தக் கட்சியினரே அவரைச் சதி செய்து வீழ்த்தியுள்ளதாக மக்கள் நம்புகின்றனர்.

முஹிடின் பிரதமராக நியமிக்கப்பட்டதால் பக்காத்தானின் போராட்டம் முடிவுக்கு வந்ததாகச் சொல்ல முடியாது. அரசியல் விளையாட்டு இன்னும் ஓயவில்லை. இதற்கு முன்னர் மகாதீர், மூன்று பிரதமர்களையும் 3 துணைப் பிரதமர்களையும் களையெடுத்துள்ள தை மறந்து விடக்கூடாது. அவரின் உடலில் இன்னும் அரசியல் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது. புதிய கூட்டணியின் ஆட்சிக்குக் குடைச்சல் தராமல் மகாதீருக்குத் தூக்கம் வராது. அவர் எப்போதும் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாதவர். அதனால், அவர் எதையாவது செய்ய திட்டமிடுவார் என அஸிஸுடின் குறிப்பிட்டார். தற்போதைய சூழ்நிலையில் புதிய கூட்டணி அரசு நிலையில்லாமல் இருக்கிறது. சிலர் அதிலிருந்து கட்சி மாறினால், நிலைமை மோசமாகும். எனவே பக்காத்தான் தற்போது மக்களின் ஆதரவை ஒருங்கிணைக்கும் வேலையைச் செய்ய வேண்டுமென ஜேம்ஸ் சின் குறிப்பிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 4 =