துணிப் பையில் கணவன் – மனைவி சடலங்கள்

0

அண்மையில் கோல சிலாங்கூர் செக்ஷன் 27இல் கால்வாய் ஒன்றில் துணிப் பையில் திணித்து வீசப்பட்ட பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டனர்.
துணிப் பையில் வைத்து வீசப்பட்டவர் சுபாங் ஜெயா சுற்று வட்டாரத்திலுள்ள உணவகம் ஒன்றில் மேலாளராக வேலை செய்து வந்த டான் சியூ மீ. இவருக்கு வயது 52 ஆகும்.
டான் சியூ மீ கொடூரமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு உடல் முழுவதும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இக்கொலை தொடர்பாக டான் சியூ மீயின் கணவரான 79 வயதான லிம் ஆ கீ அல்லது லிம் கோக் ஹோவை போலீசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இதனிடையே அலாம் மேகா எல்ஆர்டி நிலையம் அருகிலுள்ள கால்வாயில் துணிப் பையில் திணிக்கப்பட்டு வீசப்பட்ட சடலம் ஒன்றை போலீசார் மீட்டதாக ஷா ஆலம் வட்டார துணை ஆணையர் பஹாருடின் மாட் தாயிப் தெரிவித்தார்.
அதிலிருந்த சடலம் கொலை செய்யப்பட்ட டான் சியூ மீயின் கணவரான லிம் ஆ கீ தான் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
ஆடவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெறவில்லை என்றும் பஹாருடின் கூறினார்.
இந்த இரு கொலைகள் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட சோதனையில் கோத்தா கெமுனிங் சுற்று வட்டாரத்தில் இரு இந்திய நாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 வயது முதல் 25 வயதுடைய அவர்கள் இருவரும் சுபாங் ஜெயா பேரங்காடியில் பாதுகாவலர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட தம்பதியருக்குச் சொந்தமான கொண்டோமினிய வீட்டில் வாடகைக்கு தங்கி வந்துள்ளனர்.
நேற்று காலை 9.30 மணிக்கு ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அவர்கள் கொண்டு வரப்பட்டனர்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு அவர்கள் 7 நாள்களுக்கு போலீஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைக்க மாஜிஸ்திரேட் ஹனி ஸாத்துல் அக்மார் சூல்கிப்ளி அனுமதி வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here