திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து சாதனை படைத்த தற்குறி அரசியல்வாதிகள்

திருவள்ளுவருக்கு திருவுருவம் ஈன்று தந்த ஓவிய மேதை என பலராலும் புகழப்பட்ட கே.ஆர். வேணு கோபால் சர்மா அவர்களின் படைப்பிற்கு நேர்ந்த பேரிகழ்ச்சி என்றே இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது.
முதலில், திருவள்ளுவருக்கு உருவம் பிறந்த வரலாற்றை சற்றே புரட்டிப் பார்க்கலாம். சுமார் நாற்பது ஆண்டு காலம் தமிழ், திருக்குறள், திருவள்ளுவர் என்றே ஆராய்ச்சியில் மூழ்கியிருந்த வேணு கோபாலனாரைச் சந்தித்த அன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் பக்தவத்சலம் திருவள்ளுவருக்கு சரியானதோர் உருவத்தை உருவாக்கித் தர வேண்டும் என்ற விண்ணப்பத்தை வைத்துள்ளார்.
தனது நீண்ட ஆராய்சிக்கான முடிவு வந்துவிட்டதை முதல்வரிடம் தெரிவித்து மகிழ்ச்சியுடன் அதற்கான பணிகளைத் தொடங்கினார் வேணு கோபாலனார். 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இந்தியாவில் அந்நாளில் மகாத்மா காந்தி அடிகளால் பிரகடனப்படுத்தப்பட்ட சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தது.
சுதேசி இயக்கம் என்பது அந்நிய நாட்டு பொருட்களை உபயோகப்படுத்தக்கூடாது. மாறாக இந்திய நாட்டு பொருட்களை மட்டுமே வாங்கி உபயோகப்படுத்த வேண்டும் என்ற நிலை. இந்நிலையில், திருவள்ளுவரின் திருவுருவத்தை தீட்ட தேவையான வண்ணங்கள், தூரிகைகள் போன்ற பல சாதனங்களை உலகின் மிகச் சிறந்த நிறுவனங்களில் இருந்து பெற்றுத் தர வேண்டும் எனும் கோரிக்கையை முதல்வர் பக்தவத்சலத்திடம் ஓவியர் விடுக்கிறார்.
தமிழர்களுக்கு மறை நூல் அளித்தவன், உலகிலுள்ள அத்துணை மனிதர்களுக்கும் வாழும் நெறியையும் இலக்கணத்தையும் அளித்தவன் திருவள்ளுவன். அவருக்கென்று உருவம் பிறக்க வேண்டும் என்றால் சுதேசி சட்டத்தை சற்று தளர்த்தியே ஆக வேண்டும் எனும் கோரிக்கை தமிழக முதல்வரிடமிருந்து இந்திய குடியரசுத் தலைவருக்கு செல்ல சட்டம் தளர்த்தப்படுகிறது.
1959 ஆம் ஆண்டு கே.ஆர். வேணு கோபால் சர்மாவின் நாற்பது ஆண்டு கால ஆராய்ச்சியின் முடிவாக திருவள்ளுவரின் திருவுருவம் பிறக்கிறது. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் முதல் கவிஞர் பாரதிதாசனார், பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், பொன்மொழி புலவர் அப்பாதுரையார், கவியரசு கண்ணதாசன், கல்கி, சாண்டில்யன் போன்ற எண்ணற்ற அறிஞர் பெருமக்கள் ஓவியரின் வீட்டிற்கு படையெடுத்து வந்து திருவள்ளுவரின் திருவுருவத்தைக் கண்டு உணர்ச்சி பொங்க பேசிய ஒலிநாடாக்கள், எழுதிய வாழ்த்து மடல்கள், பத்திரிகை செய்திகள் என இன்றளவும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.


பின்னர், இன்று வரை உள்ள தமிழக சட்டசபை வரலாற்றில் நடைபெறாத ஓர் நிகழ்வு நடைபெற்றது. அன்றைய இந்தியத் துணை குடியரசு தலைவர் ஜாஹிர் ஹுசேன் அவர்களால் தமிழக சட்டசபையில் திருவள்ளுவரின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டு ஓவியர் கே. ஆர்.வேணு கோபால் சர்மாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. பின்னர் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க.வின் தலைவரும் முதல்வருமான பேரறிஞர் அண்ணா அவர்களால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் திருவள்ளுவரின் திருவுருவம் இருக்க வேண்டும் எனும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்திய அரசாங்கம் இந்திய தபால் தலையிலும், நாணயங்களிலும் திருவள்ளுவரின் திருவுருவத்தை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று வரை, தமிழக சட்டசபை மட்டுமில்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள் என அனைத்து கட்டடங்களும் ஜாதி, மதங்களை கடந்து நிற்கும் அய்யன் திருவள்ளுவரின் திருவுருவத்தை தாங்கி நிற்கிறது. டில்லி நாடாளுமன்றத்திலும் ஐக்கிய நாட்டுச் சபையிலும் கே.ஆர். வேணு கோபால் சர்மா அவர்களால் ஈன்று தந்த திருவள்ளுவர் தான் வீற்றிருக்கிறார்.
இந்த வரலாற்று தகவல்கள் ஒரு புறமிருக்க, திருவள்ளுவரை ஏன் இவ்வாறு வரைந்தேன் எனும் தனது ஆராய்ச்சி குறிப்புகளையும் பல மேற்கோள்களையும் எழுதி தனிச்சிறப்பு மலராக திருவள்ளுவரை வரைந்த ஓவியரால் வெளியிடப்பட்ட நூலை கூட வாசிக்க இன்றைய தமிழக அரசில்வாதிகளிடம் நேரம் இல்லை போலும்.
மோடியின் பெயரால் தமிழகத்தில் உள்ள சில விஷக்கிருமிகள் செய்யும் அட்டகாசம் என்பதாகவே இதை பார்க்க முடிகிறது. சில தொலைக்காட்சி பேட்டிகளை சமீப காலமாக பார்க்கின்ற போது, இன்றுள்ள அரசியல்வாதிகளின் அறிவுத் திறனை நினைத்து குழம்புவதா› வெட்கப்படுவதா› என்று கூட புரியவில்லை.
அதில் ஒருவர் நகைச்சுவை நடிகர் எஸ்.வி. சேகர். அவரிடம் கேட்க்கப்பட்ட ஒரு கேள்விக்கு, வீட்டில் உள்ள நிறத்தை மாற்ற வெள்ளை சாயம் அடிக்கப்பட்டது. மழையில் நனைந்து வெள்ளை சாயம் கலைந்து உண்மையான நிறமான காவி நிறம் தெரிகிறது என உளறி பிதற்றுகிறார். அடித்த மழையில் துணியின் சாயம் வெளுத்தது என்றால் அந்த மழையில் திருநீறும் ருத்திராட்சமும் தானாக பூத்தது விந்தையான ஒன்று. உலக பொது மறையை அளித்த திருவள்ளுவரை எந்த விதமான ஜாதி, மதச் சாயல்களுடன் தொடர்புபடுத்தி பேசி தமிழர்களின் தனிச்சின்னமாக விளங்கும் திருவள்ளுவரின் திருவுருவத்தை களங்கப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.


சவாமி விவேகானந்தர் தன்னை ஓர் இந்து மதத் துறவியாய் பிரகடனப்படுத்திக் கொண்டார். அதனால் காவி நிறத்தில் தனது தலைப்பாகையை வைத்துக் கொண்டார். அதேவேளை, தேசப் பற்றையும் சமூக சீர்திருத்தத்தையும் நாட்டு மக்களுள் வளர்க்க பிறந்தவன் முண்டாசு கவி பாரதியார். அவர் தன் தலைப்பாகையை வெள்ளையில் தாங்கி நின்றார். காவி நிறம் தியாகத்தின் வண்ணமாக விளங்குகிறது என்கிறார் எஸ்.வி.சேகரும் அவரைச் சேர்ந்தவர்களும். வெள்ளை வண்ணம் என்பது தூய்மையின் வண்ணம் என்பதை யார் அவர்களுக்கு புரிய வைப்பார்கள்›
எண்ணத்தில் தூய்மை, கருத்தில் தூய்மை, சொல்லில் தூய்மை, எழுதும் எழுத்தில் தூய்மை இதை கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் ஒரு வித மயக்கத்தில் வாழ்ந்து வரும் இவர்களிடம் என்ன பேசுவது› வேறொரு தொலைக்காட்சி பேட்டியில் வேறொருவர் பேசுகையில், 1950 ஆம் ஆண்டு வெளிவந்த ஔவையார் படத்தில் திருவள்ளுவராக தோன்றும் கதாபாத்திரம் திருநீறு பூசி நடித்திருக்கிறார் என்கிறார்.. அட ஞான சூன்யமே திரைபடத்தில் வரும் கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு பேசுவதா…
தமிழுக்கும் தமிழருக்கும் சொந்தமானவர் திருவள்ளுவர் என்பதுதான் என் வாதம். திருவள்ளுவரை உலகில் உள்ள எவர் வேண்டுமானாலும் போற்றி பாராட்டலாம் ஆனால் சொந்தம் கொண்டாட முடியாது.
திருவள்ளுவருக்கு திருவுருவம் ஈன்று தந்த ஓவிய மேதை, பல அறிஞர்களாலும் ஓவியப் பெருந்தகை என அன்புடன் அழைக்கப்பட்ட கே.ஆர். வேணு கோபால் சர்மாவின் மகனான நான் இந்த பதிவை வெளியிட கடமைப்பட்டுள்ளேன்.
இறுதியாக சிறு செய்தி, அண்மையில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன அதிபர் ஸி ஜின் பிங்கும் இந்திய பிரதமர் மோடியு ம் தமிழகத்தில் உள்ள மகாபலிபுரத்தில் சந்தித்த நிகழ்வு அனைவரும் அறிந்ததே. எத்தனையோ விதமான மிடுக்கான ஆடைகளில் கம்பீரமாக காட்சி தருபவர் பிரதமர் மோடி என்பது உலகமே அறிந்த ஒன்று. அப்படியிருக்க, தமிழ் நாட்டிற்குள் கால் வைத்தாலே வெள்ளைக்கு மாறிவிட வேண்டும் என்பது மோடிக்கே தெரிந்திருக்கிறது. அதனால் தான் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, வெள்ளை துண்டு. அவர் திருவள்ளுவரை நன்கு புரிந்து வைத்திருக்கிறார். இவர்களுக்கு எப்போது புரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 17 =