திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் சிலையில் இருந்து நகைகள் திருடப்பட்டது! முழு விவரம்

0

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கேரள ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதனால் கோவிலில் பூஜைகள் செய்வது, ஆகம விதிகளை கடைபிடிப்பது போன்றவற்றில் போத்திகள்தான் முக்கிய இடம் வகிப்பார்கள்.

இந்த கோவிலின் மூலவரான ஆதிகேசவ பெருமாள் தங்க நகைகளும், தங்க தகடுகளால் ஆன கவசமும் அணிவிக்கப்பட்ட நிலையில் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகளை கோவிலில் பூஜை செய்த போத்திகளும், தேவசம்போர்டு ஊழியர்கள் உள்ளிட்டோரும் சேர்ந்து திருடியதாக 1989, 1990-ம் ஆண்டுகளில் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆதிகேசவபெருமாள் சிலை

இதுபோன்று சயன நிலையில் இருந்த ஆதிகேசவபெருமாள் சிலையில் இருந்து தான் சுமார் 10 ஆண்டுகளாக 6½ கிலோ தங்க ஆபரணங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன.

முதலில் இந்த குற்றச்சாட்டை அதிகாரிகளோ, காவல்துறையோ பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் இந்த திருட்டை கண்டுபிடிக்கக்கோரி மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர். அப்போதைய திருவட்டார் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஹேமச்சந்திரனும் இதுதொடர்பாக சட்டசபையில் பேசினார். அப்போதைய தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கவனத்துக்கு இது கொண்டு செல்லப்பட்டதும் அவர் உடனடியாக விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த சம்பவங்களை தொடர்ந்து அந்த கோவிலின் போத்தியாக இருந்த கேசவன் போத்தி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மனைவி கிருஷ்ணம்பாளும் தற்கொலைக்கு முயன்றார். இது பல்வேறு தரப்பிலும் சந்தேகத்தை அதிகரிக்க செய்தது.

இதையடுத்து முதன் முதலில் இந்த திருட்டு தொடர்பாக 1992-ம் ஆண்டு திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். பின்னர் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததை தொடர்ந்து நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் முதலில் கோவிலின் காவலாளியாக பணிபுரிந்த கோவிந்தப்பிள்ளை என்பவரை கைது செய்து விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில் அவர் பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டார். அதாவது, கேசவன் போத்தி மற்றும் சில போத்திகளும், கோவில் ஊழியர்கள், தங்கநகை செய்யும் சிலரும் சேர்ந்து 1974-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை ஆதிகேசவ பெருமாள் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளையும், தங்க கவசத்தையும், வைர கிரீடத்தையும் கொஞ்சம், கொஞ்சமாக திருடியது தெரிய வந்தது.

கோவில் போத்தியாக இருப்பவர் மட்டுமே மூலவரான தங்க நகைகள் மற்றும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ள ஆதிகேசவ பெருமாள் சிலை இருக்கும் கருவறைக்குள் செல்ல வேண்டும் என்பது கோவிலின் ஐதீகமாக இருந்து வருகிறது. இதை பயன்படுத்தி அந்த காலகட்டத்தில் இருந்த கேசவன்போத்தி, அவருடைய கூட்டாளிகளான ஸ்ரீஐயப்பன், பரளி ஜனார்த்தனன், கோபிநாதன், கோவில் காவலாளி கோவிந்தப்பிள்ளை மற்றும் தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்களை நடைசாத்தும் நேரத்தில் கோவிலில் பூஜை செய்ய வரவழைத்து, அவர்கள் கொண்டு வரும் பூ, பழம் பிரசாத தட்டுகளில் ஆதிகேசவ பெருமாள் சிலையில் உள்ள தங்க நகைகளையும், தங்க கவசத்தையும் சிறிய, சிறிய அளவில் வெட்டி எடுத்து கொடுத்து அனுப்பியுள்ளனர். வெளியில் சென்ற அந்த நகைகளையும், வெட்டி கொடுக்கப்பட்ட தங்க தகட்டையும் வாங்கி விற்பனை செய்து பங்கு வைத்துள்ளனர். இப்படி பல கிலோ கணக்கில் நகைகளை திருடியது அம்பலமாகியது.

இது அரசல், புரசலாக வெளியில் தெரிந்து, புகார்கள் வரத்தொடங்கியதும் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் கோவிலில் ஆய்வு நடத்தி நகைகளை கணக்கெடுக்க மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதன்படி ஆய்வு நடத்த வரும் அதிகாரிகளுக்கு கோவில் போத்திகள் லஞ்சமாக பணத்தை கொடுத்து நகைகள் சரியாகத்தான் இருக்கிறது என்று சான்றளிக்க செய்துள்ளனர். அதற்கு அப்போதைய இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளாக இருந்த கோபாலகிருஷ்ணன், சங்கர குற்றாலம், முருகப்பன், வேலப்பன் நாயர், ராஜையப்பன், மகாராஜபிள்ளை ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். அதையும் மீறி கோவில் கருவறைக்குள் நுழைந்து சோதனை செய்ய முயற்சி செய்யும் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கருவறைக்குள் வேறு நபர்கள் நுழைந்தால் புனிதம் கெட்டுவிடும் என்றும், அவ்வாறு நுழைபவர்களுக்கு பல பிரச்சினைகள் உருவாகும் என்று கூறி அச்சத்தையும் போத்திகள் ஏற்படுத்தினர்.

இந்த விவரங்களை எல்லாம் கோவில் காவலாளி கோவிந்தப்பிள்ளை போலீசாரிடம் தெரிவித்ததும் போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து கோவிந்தப்பிள்ளையை கைது செய்து முதன்முதலில் இந்த வழக்கு நடைபெற்று வந்த பத்மநாபபுரம் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் கோவிந்தப்பிள்ளையிடம் நடந்த விசாரணையின்போது, அவர் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்தார். அவர்தான் இந்த வழக்கின் முதல் அரசுத்தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டார். அவரது தகவலின் அடிப்படையிலும், போலீஸ் விசாரணையின் அடிப்படையிலும் இந்த வழக்கில் 34 பேர் சேர்க்கப்பட்டு வழக்கு விசாரணை அதே கோர்ட்டில் நடந்து வந்தது. 1995-ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர்.

27 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று நாகர்கோவில் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. 23 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருமே தற்போது 47 வயது முதல் 86 வயது வரையிலானவர்களாக இருந்தனர். 27 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு விவரங்களை அறிவதற்காக நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகளும், பொதுமக்கள் பலரும் கோர்ட்டில் திரண்டிருந்தனர். இதனால் கோர்ட்டு வளாகம் பரபரப்புடன் காட்சி அளித்தன. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − five =