திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரூ.35¼ லட்சம் வெள்ளி கொலுசுகள் பறிமுதல்

சேலம் மாநகரில் உள்ள செவ்வாய்பேட்டை கொலுசு உற்பத்தி தொழிலில் தமிழகத்தில் முதலிடத்தை பெற்றதாகும். நகைக்கடையில் இருந்து வெள்ளிக்கட்டிகளை கிலோ கணக்கில் உற்பத்தியாளர்கள் பெற்றுக்கொண்டு, அவற்றை தேவையான மாடல்களில் வெள்ளிக்கொலுசுகளை தயார் செய்து மீண்டும் நகைக்கடைகளில் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள்.


கொலுசுகளை உற்பத்தி செய்து கொடுப்பதற்கான கமிஷன் தொகை வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டு விடும். பெரும்பாலும் வட நாட்டில் உள்ள நகைக்கடைகளுக்குத்தான் கொலுசுகளை தயார் செய்து ரெயில்கள் மூலம் அனுப்பி வைப்பது வழக்கம்.

இந்தநிலையில் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 4.20 மணிக்கு கொல்கத்தா மாநிலத்திற்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு செல்வது வழக்கம். வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படுவதால் ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் புவனேஸ்வரம் அருகே உள்ள கட்டாக் நகருக்கு செல்ல சேலத்தை சேர்ந்த 2 கொலுசு வியாபாரிகள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் அவர்களின் உடைமைகளை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு இளையராஜா, ‘ஸ்கேன்‘ செய்து பார்த்தார். இருவரும் கொண்டு வந்த பைகளை சோதனை செய்தபோது அவற்றில் வெள்ளிக்கொலுசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் ரெயில்வே பாதுகாப்பு கோட்ட ஆணையர் முகைதீன், உதவி ஆணையர் சின்னத்துரை ஆகியோர் உத்தரவின்பேரில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

விசாரணையில் பிடிபட்ட இருவரும் சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த அரவிந்த் (வயது 27), நெத்திமேட்டை சேர்ந்த சக்திவேல் (25) என தெரியவந்தது. இருவரும், வெள்ளிக்கொலுசு வியாபாரிகள். ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் இயங்கும் அன்னபூர்ணா ஜூவல்லரி என்ற நகைக்கடைக்கு ஆர்டரின் பேரில் வெள்ளிக்கொலுசுகளை தயார் செய்து எடுத்து செல்வது தெரியவந்தது.

ஆனால், அதை கொண்டு செல்வதற்கான எவ்வித ஆவணமும் அவர்களிடம் இல்லை. அதைத்தொடர்ந்து 2 பைகளிலும் இருந்த 57 கிலோ 372 கிராம் எடையுள்ள வெள்ளிக்கொலுசுகளை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.35 லட்சத்து 34 ஆயிரத்து 115 ஆகும். இருவர் மீதும் திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் தகவல் அறிந்து திருச்சி வருமானவரி அதிகாரி ராஜசேகரன் மற்றும் குழுவினரும் அங்கு வந்தனர். அவர்கள், வெளிமாநிலத்திற்கு வெள்ளிக்கொலுசுகளை எடுத்து செல்வதற்கான உரிய வரியாக ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 24-ஐ விதித்தனர். அதுபோல ரெயில்வே பாதுகாப்பு படையினரும் அதே தொகையை அபராதமாக விதித்தனர்.

பின்னர், சேலம் வியாபாரிகள் இருவரும் உடனடியாக வரி மற்றும் அபராதத்தொகை ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்து 48-ஐ ஆன்லைன் மூலம் செலுத்தினர். அதன் பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர். திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் வெள்ளிக்கொலுசுகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + twelve =