திருச்சியில் 45 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்- அய்யாக்கண்ணு பேட்டி

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க புதிய அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் ஒரத்தநாடு புதூரில் செயல்பட்டு வரும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று, நெல்லை விற்பனை செய்ய காத்திருந்த விவசாயிகளை சந்தித்து பேசினார். பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் விற்பனைக்காக சாலை நெடுகில் பெருமளவில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த நெல்களை விரைவாக கொள்முதல் செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் 17 சதவீதத்திற்கும் கூடுதலான ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு ரூ.20-யை கூலியாக அரசு வழங்க வேண்டும்.விவசாயிகள் விளைவிக்கும் நெல், கரும்பு உள்ளிட்ட உற்பத்தி பொருட்களுக்கான விலையை உயர்த்தி லாபகரமான விலையை வழங்கிட வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி விரைவில் திருச்சியில் 45 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது சங்க மாநில செயலாளர் கக்கரை மனோகரன் உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × two =