திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உலகளந்தபெருமாள் கோவில் உள்ளது. இது பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களான 5 தலங்களில் முதலாவது தலம் என்ற பெருமை உடையது. மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்று என்ற சிறப்பு வாய்ந்தது.

நாலாயிர திவ்யபிரபந்தம் ஆழ்வார்களால் முதன் முதலில் பாடப்பெற்றது என்ற பெருமையும் இக்கோவிலுக்கு உண்டு. இதனால் நாலாயிரபிரபந்த அவதார தலம் என்றும் அழைப் பார்கள். பெருமாளை தமிழ் பாசுரங்களில் பாடியவர்களும், ஆழ்வார்களில் முதன் முதல் தோன்றியவர்களுமான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய 3 ஆழ்வார்களும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளை நேரில் தரிசித்து பாசுரங்கள் பாடி மகிழ்ந்தனர். இதனை நடுநாட்டு திருப்பதி என்றும் அழைப்பார்கள்.

இந்த கோவில் ஊரின் நடுவே சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமையப் பெற்றுள்ளது. மூலவர் உலகளந்த பெருமாள் மிகப்பெரிய உருவத்துடன் இடது காலை பூமியிலும், வலது காலை ஆகாயத்தை அளக்கும் வகையில் உயர்த்தியும் இருக்கும் வகையில் பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளனர். உலகளந்த பெருமாளை தரிசிக்க வருபவர்கள் யாராக இருந்தாலும் அவரது திருமேனியை அண்ணாந்துதான் பார்க்கவேண்டும். இச்சிலையில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் ஏந்தி பக்தர்களுக்கு ஞானத்தை வழங்குவதாக ஒரு ஐதீகம் உள்ளது.

கோபுரங்கள்

இந்த கோவில் மற்றும் கோபுரங்கள் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவ அரசர்களால் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கோவிலுக்கு கிழக்கு கோபுரம் மற்றும் மேற்கு கோபுரங்கள் மிகப்பெரியதாக இருக்கும். கோவில் வாசலில் உள்ள ராஜகோபுரம், திருமங்கை மன்னன் கோபுரம் என மொத்தம் 4 கோபுரங்கள் உள்ளன. மேலும் பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி தனித்தனியே உள்ளது. இங்குள்ள தாயார் சன்னதி மிக நீண்ட சன்னதி என்ற பெருமை கொண்டது.

பழமையான ஆலயம்

திரிவிக்கிரம அவதார தலம் இது. பகவானின் வலக்கையில் சங்கும், இடக்கையில் சக்கரமும், இங்கு மாறித் தென்படுகின்றன. முதலாழ் வார்கள் மூவரும், இந்தத் திவ்ய தேசத்தின், ஒரு வீட்டின் இடைகழியில் சந்தித்து, பகவானையும் பிராட்டியோடு சேவித்து, அந்தாதி பாடின தலம். திருமங்கையாழ்வார், பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற தலம் இது.

மகாபலி, மிருகண்டு முனிவர் பிரம்மன், இந்திரன், குட்சி, சவுகர், காச்யபர், காலவரி, குசத்வஜன் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் ஆகியோருக்கு இத்தலப் பெருமாள் பல தடவை நேரிடையாகத் தரிசனம் கொடுத்துள்ளார். இந்தக் கோவில் பஞ்ச கிருஷ்ணாரண்ய சேத்திரங்களில் ஒன்று. ஒரு சமயம் மிருகண்டு முனிவர் இந்த தலத்திற்கு வந்து திருமாலை நோக்கி தவம் செய்தார். திருமாலும் மிருகண்டு முனிவருக்குத் தரிசனம் காட்டி என்ன வேண்டும் என்று கேட்க தனக்கு வாமன அவதாரம் காட்சியை மீண்டும் காட்ட வேண்டும் என்றார்.

பெருமாளும் உடனே வலது காலை விண்ணில் வைத்து இடது காலை பூமியில் அழுத்தி வாமன அவதாரத்தைக் காட்டினார். இன்னொரு சமயம் இங்கு தங்கி தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களைத் துன்புறுத்திய பாதாள கேது என்ற அரக்கனை திருமால் குசத்வஜன் என்ற மன்னன் மூலம் கொன்று முனிவர்களது பயத்தைப் போக்கியதாக வரலாறு உண்டு. கி.மு.500 -ம் ஆண்டில் கட்டப்பட்ட கோவில் என்பது மிகவும் பிரசித்தம்.

சொர்க்கவாசல் திறப்பு

இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிக முக்கியமானது சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி. அடுத்து பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவம். இந்த நிகழ்ச்சி 15 நாட்கள் நடைபெறும், மேலும் ஆவணி மாதத்தில் நடைபெறும் ஸ்ரீருக்மணி சத்தியபாமா, சமேத ஸ்ரீவேனு கோபாலசாமி ஜெயந்தி உற்சவம் சிறப்பானது. இது 11 நாட்கள் நடைபெறும். மேலும் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் இந்த கோவிலில் தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

இங்கு விஷ்ணுவும், துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக் கிறார்கள். மூலவரின் திருமேனி தருவால் (மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். சிவாலயங் களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், விஷ்ணு துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக் கிறார்கள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.

பதவி உயர்வு

நல்ல பதவிகளை அடைய விரும்புபவர்களும், பதவி உயர்வு வேண்டு பவர்களும், பதவி இழந்தவர்களும் இந்த கோவிலில் வந்து பிரார்த்தனை செய்வார்கள். அவ்வாறு செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோவிலின் தனிச்சிறப்பு. கல்யாண பாக்கியம், குழந்தை வரம் ஆகியவை வேண்டியும் பலர் வந்து வழிபடுகின்றனர். அவர்களது வேண்டுதல் நிறை வேறுகின்றன. இங்குள்ள சக்கரத்தாழ்வார் விஷ்ணு சொரூபமாக இருப்பதால் சத்ருக்கள் (எதிரிகள்) தொல்லை நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கோவில் நடைதிறக்கும் நேரம்

இந்த கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, முன்பகல் 11.30 மணிக்கு நடை சாற்றப்படுகிறது. அதேபோல் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு சாற்றப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் கூடுதல் நேரம் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − fifteen =