திரிசங்கு நிலையில் அம்னோ எம்பிக்கள்; 3 வாக்குகளில் பட்ஜெட் தோல்வியடையுமா?

  பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின்2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஆதரிப்பதா இல்லையா என்ற திரிசங்கு நிலையில் அம்னோ இருக்கும் வேளையில் குறைந்தது 3 வாக்குகளில் பட்ஜெட் தோல்வியடையலாம் என்று கூறப்படுகிறது. நவம்பர் 6ஆம் தேதி நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் மக்களவையில் 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
  இந்த பட்ஜெட்டில் பல திருத்தங்கள் செய்யக்கோரி டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் எம்பிக்களும் அம்னோ எம்பிக்களும் கடுமையாக வலியுறுத்தி வருகின்றனர்.
  ஜாசாவுக்கு ஒதுக்கப்பட்ட 8 கோடியே 50 லட்சம் வெள்ளியை மறு பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் இபிஎப் முதல் கணக்கில் இருந்து 10,000 வெள்ளியை மீட்பதற்கு சந்தாதாரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பல எம்பிக்கள் ஆணித்தரமாக வலியுறுத்தி வருகிறார்கள்.
  நாடாளுமன்றத்தில் மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை 222ஆகும். இதில் பத்து சாப்பி, கெரிக் எம்பிக்கள் அண்மையில் மரணமடைந்தனர்.
  நாளை பட்ஜெட் மீதான வாக்களிப்பு நடைபெறுகிறது. மொத்தம் 220 எம்பிக்கள் இதில் பங்கேற்பார்கள். பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு 108 எம்பிக்கள் உள்ளனர்.
  குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸாலி ஹம்ஸா, நாளை பட்ஜெட் வாக்களிப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என அறிவித்திருக்கிறார்.
  கினாபாத்தாங் எம்பி டத்தோ புங் மொக்தார் ராடின் நாளை நாடாளுமன்றத்திற்கு வர முடியாத நிலையில் உள்ளார். இவர் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
  மேலும் அம்னோவைச் சேர்ந்த கெரிக் எம்பி ஹஸ்புல்லா மரணமடைந்திருக்கிறார். இதனால் 3 எம்பிக்களின் ஆதரவை பெரிக்காத்தான் நேஷனல் இழக்கும் வாய்ப்பு உள்ளது.
  கெனிங்காவ் எம்பி ஜெப்ரி கிட்டிங்கான் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், நாளை மக்களவையில் கலந்து கொள்வேன் என அறிவித்திருக்கிறார்.
  இதனிடையே அம்னோ உச்சமன்ற உறுப்புனர் புவாட் ஸர்காஷி கூறுகையில், நாளை முதல் நாட்டில் எதுவும் நடக்கலாம்.
  பட்ஜெட் தோல்வி காண நேரிட்டால், நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் அல்லது புதிய பிரதமர் தேர்வு செய்யப்படலாம் என கோடி காட்டியிருக்கிறார்.
  பட்ஜெட்டில் விரைந்து புதிய திருத்தங்களைச் செய்யும் படி அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோ அமாட் மஸ்லான் காலக்கெடு விதித்துள்ளார்.
  இதனிடையே நாளை மக்களவையில் பட்ஜெட்டை ஆதரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் அம்னோ எம்பிக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் தோன்றியுள்ளன.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here