திடீர் தேர்தலை நடத்த முஹிடினுக்கு தயக்கம் ஏன்? – தமிழ் மலர் சிறப்புக் கட்டுரை

பிரதமர் முஹிடின் யாசினுக்கு செல்வாக்கு அதிகரித்து வரும் வேளையில், அவர் திடீர் பொதுத்தேர்தலை நடத்தத் தயங்குவது ஏன் என்ற கேள்வி தொடுக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் மெர்டேக்கா சென்டர் நடத்திய ஆய்வில், முஹிடினுக்கு 69 விழுக்காட்டு ஆதரவு இருப்பதாகவும் அதனைப் பயன்படுத்தி திடீர் தேர்தலை நடத்தினால், அவர் அமோக வெற்றிபெற முடியும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
பிரதமராகி 6 மாதங்களில் அவர் கோவிட்-19 நோயைத் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக மலாய்க்காரர்களும் பூமிபுத்ராக்களும் அவரை வெகுவாக ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.
மெர்டேக்கா சென்டரின் ஆய்வில், மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள 10 மாநிலங்கள் மற்றும் சபா, சரவாக்கில் உள்ள பூமிபுத்ராக்களும் முஹிடினுக்கு பேராதரவு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தியர்களில் 60 விழுக்காட்டினர் அவருக்கு ஆதரவாக உள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
அதே வேளையில் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியை 58 விழுக்காட்டினர் ஆதரிக்கும் வேளையில், 28 விழுக்காட்டினர் அதன் மீதான தங்களின் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
எனினும், முஹிடினுக்கு சீன சமூகத்தின் ஆதரவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது.
முஹிடின் சார்ந்துள்ள பெரிக்காத்தான் நேஷனலில் மலாய் ஆதிக்கம் கொண்ட அம்னோவும் பாஸ் கட்சியும் ஒன்றை ஒன்று மோதிக் கொண்டு, மலாய் சமூகத்தின் ஆதிக்கத்தை வயப்படுத்த போட்டியிடுவது முஹிடினுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
பொதுத்தேர்தல் உறுதியானால், தொகுதிப் பங்கீட்டில் அவை மோதிக்கொள்ளும் நிலையும் வரலாம். இந்நிலையில் முஹிடின் அணியினர், அம்னோவிடம் பேசி தாங்கள் விரும்பும் தொகுதிகளைப் பெற முனைந்து வருகின்றனர். பெர்சத்து, அம்னோவிலிருந்து பிரிந்து, கடந்த பொதுத்தேர்தலில் அதன் பாரம்பரிய தொகுதிகளிலேயே போட்டியிட்டு, வெற்றி பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, முஹிடின் தமக்கிருக்கும் செல்வாக்கை மட்டுமே வைத்துத் தேர்தலில் வெற்றியைக் குவிக்க முடியாது என்று அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிவமுருகன் பாண்டியன் குறிப்பிடுகிறார்.
தீர்க்க வேண்டிய கடுமையான பிரச்சினைகளை அவர் முதலில் கையாள வேண்டுமென அவர் குறிப்பிடுகிறார். பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் முவாஃபக்காட் நேஷனல் ஆகியவற்றில் அவருக்குள்ள பிரச்சினைகளை அவர் தீர்க்க வேண்டும். பொதுத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அதனை அவர் செய்தாக வேண்டும்.
அம்னோவிலிருந்து பிரிந்து வந்த கட்சி பெர்சத்து என்பதால்,அம்னோவின் பெரும்பாலான தலைவர்கள் அதன் மீது அதிருப்தி கொண்டுள்ளனர். தற்போது முஹிடினையும் பெர்சத்துவையும் சாடி அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். பிரதமர் பொதுத்தேர்தலை நடந்த எண்ணியுள்ள செய்தி வெளிவந்த பின்னர், அந்தச் சாடல் போக்கு அதிகரித்து வருகிறது.
இதனிடையே சிங்கப்பூர் அனைத்துலக கல்விக் கழகத்தின் ஓ ஈ சன் கூறும்போது, அம்னோவின் அதிருப்தி முஹிடினுக்கு பெரும் ஆபத்தைக் கொண்டு வராது என்று குறிப்பிடுகிறார்.
தற்போதையை சூழலானது இரு கட்சிகளையும் ஒன்றிணைத்து, தொகுதிப் பங்கீட்டில் சமரசம் காண வைக்கும் என்று கருதுகிறார். எனினும், 60 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை ஆண்ட அம்னோ, இதில் அதிகமாக இறங்கி வராது என்றே அவர் கருதுகிறார்.
கூட்டணியின் தலைமைத் துவத்தில் முஹிடின் வெற்றி பெற்றால், அவருக்கான செல்வாக்கு அவரின் வெற்றியை உறுதி செய்யும். இதில், பிரச்சினை என்றவென்றால், அதிகப் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருக்கும் அம்னோ, தானே கூட்டணியின் தலைமைத்துவத்தை அடைய வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டிருக்கிறது. மேலும், முஹிடினின் செல்வாக்கு அம்னோவுக்குப் பாதகமாக அமையுமோ என்றும் பல தலைவர்களும் நினைக்கின்றனர்.
அம்னோ, பாஸ் கட்சிகள் இணைந்த முவாஃபக்காட் வெற்றி பெற முடியும் என்ற காரணத்தினால், பெர்சத்துவை அவை இரண்டும் ஓரங்கட்ட முனைகின்றன.
அதனைத் தொடர்ந்து, அம்னோ தனது பாரம்பரியத் தொகுதிகளில் போட்டியிட கட்சியின் உச்சமன்றம் முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதன் தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி அதனை மறுத்துள்ளார்.
பாஸ் கட்சியோடு அம்னோ இணைந்து முவாஃபக்காட் நேஷனலில் போட்டியிட்டால், அக்கூட்டணி வெற்றி பெறும் என்று அம்னோ நினைக்கிறது.
இந்நிலையில் முஹிடினின் செல்வாக்கு அவருக்கே பாதகமாகக் கூட அமையலாம். கூட்டணியில் பெர்சத்துவின் பலத்தை அதிகரிப்பதிலிருந்தும் தடுக்க, தொகுதிப் பங்கீட்டில் அதற்குக் குறைந்த தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென்ற கருத்தும் நிலவுகிறது.
இக்கருத்து தொடர்ந்தால், அம்னோவுக்கும் பெர்சத்துவுக்கும் இடையே நெருக்கடி தொடரும்.
இதனிடையே மலாயா பல்கலைக்கழகத்தின் முகமட் அபு பக்கார் கூறும்போது, கெடா, திரெங்கானுவில் ஆதிக்கத்தைக் கொண்டிருக்கும் பாஸ் கட்சியின் எதிர்ப்பை முஹிடின் சந்திக்க வேண்டிவரும் என்று தெரிவித்தார். அந்த எதிர்ப்பினைச் சமாளிக்க முஹிடின் சமாதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். மலாய்க்காரர்கள் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் பெர்சத்து தனது செல்வாக்கை அதிகரிக்க வேண்டும். தற்போது பாஸ் கட்சி, கெடா, கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் 80 விழுக்காட்டு ஆதரவைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தொகுதிப் பங்கீடானது, மத்திய அரசைப் போல மாநில அளவிலும் முக்கிய பங்காற்றுகிது. கெடா, திரெங்கானு மற்றும் கிளந்தான் மாநிலங்களில் தற்போதைய நிலையே தொடர வேண்டுமென்ற அங்குள்ளோரின் கருத்தாகவும் உள்ளது. ஆக, பொதுத்தேர்தல் நடைபெற்றால்,
தாம் கூட்டு வைத் திருக்கும் அம்னோவும் பாஸ் கட்சியும் தமக்கு எதிராக என்னவெல்லாம் செய்யுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே முஹிடின் திடீர் பொதுத்தேர்தலை நடத்தத் தயங்குவதாகப் பொதுவான கருத்து நிலவுகிறது என்பதே உண்மையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =