தாய்மொழிப் பள்ளிகள் பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு கேடு விளைவிக்கிறதாம்!

தாய்மொழிப்பள்ளிகள் உண்மையில் பூமிபுத்ரா அல்லாதவர் களுக்கு கேடு விளைவிப்பதாகவே உள்ளன என்று நேற்று நீதிமன்றத்தில் வாதம் சமர்ப்பிக்கப்பட்டது. மலாய் அமைப்புகள் தொடுத்துள்ள வழக்கொன்றில் அந்த அமைப்புகளின் சார்பில் வாதாடிவரும் வழக்கறிஞர் முகமட் ஹனிப் காட்ரி அப்துல்லா அவ்வாதத்தை முன் வைத்தார். தாய்மொழிப் பள்ளிகளில் படித்துவரும் பூமிபுத்ரா அல்லாத மாணவர் களுக்கு மலாய்மொழி அறிவு குறைவாக இருப்பதால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதும் குறைந்துள்ளது என்று அவர் கூறினார். மலாய்மொழியில் சரளமாகப் பேசவும் எழுதவும் கூடிய மாணவர்களை மட்டுமே தனியார் மற்றும் பொது துறைகளைச் சேர்ந்த பெரும்பாலான முதலாளிகள் வேலைக்குச் சேர்க்க விரும்புகின்றனர். மலாய்மொழியில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ள இயலாமல் இருப்பதாலும் அவர்கள் பின்தங்க நேரிடுகிறது என்று ஹனிப் குறிப்பிட்டார். தங்கள் சொந்த நாட்டிலேயே வாழ அவர்கள் சிரமத்தை எதிர்நோக்கும்போது மற்ற நாடுகளில் அவர்கள் எப்படி வாழ முடியும்? என்று அவர் கேட்டார். சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகளை அமைக்க அனுமதிக்கும் தேசியக் கல்விச் சட்டம் கூட்டரசு அமைப்புச் சட்டத்தின் 5(1) ஆவது விதிக்கு புறம்பானதாகும் என்று ஹனிப் சொன்னார். தாய்மொழிப் பள்ளிகளின் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து மூன்று அமைப்புகள் தொடுத்துள்ள வழக்கில் தாம் சமர்ப்பித்த வாதத்தொகுப்பில் ஹனிப் இவ்வாறு குறிப்பிட்டார். தீபகற்ப மலாய் மாணவர்கள் சம்மேளனம் (ஜிபிஎம்எஸ்), இஸ்லாமிய கல்வி மேம்பாட்டு மன்றம் (மாப்பிம்) மற்றம் மலேசிய எழுத்தாளர்கள் சங்க சம்மேளனம் (கபேனா) ஆகியவை கடந்த 2019ஆம் ஆண்டில் அவ்வழக்கைத் தாக்கல் செய்தன. கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தின் 152(1) ஆவது விதியானது மலாய் மொழியைத் தேசிய மொழியாக வரையறுத்திருப்பதால் தாய்மொழிப் பள்ளிகள் செயல்படுவது சட்டத்திற்கு முரணானது என்று அறிவிக்க வேண்டுமென நீதிமன்றத்தை அந்த அமைப்புகள் கோரியுள்ளன. தாய்மொழிப் பள்ளிகள் நாட்டின் முக்கிய இனங்களை பிளவுபடுத்தியுள்ளது என்று ஜிபிஎம்ஸ் மற்றும் மாப்பிம் அமைப்புகளை பிரநிதிக்கும் ஹனிப் குறிப்பிட்டார். அப்பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனிடையே, நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ளும் அடிப்படை உரிமை வாதிகளுக்குக் கிடையாது என்று மலேசிய சீனமொழி மன்றத்தைப் பிரதிநிதித்து வாதாடிய மூத்த வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் வாதிட்டார். ™ஓய்வுபெற்ற தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம், மலேசிய தமிழ்நெறிக் கழகம், முன்னாள் மலேசிய தமிழ்ப்பள்ளி மணவர்கள் சங்கம் ஆகியவையும் சீனர்களின் பல கல்வி அமைப்புகளும் பிரதிவாதிகளாகப் குறிப்பிடப்பட்டுள்ளனர். அரசாங்கத்தைத் தவிர்த்து, மஇகா, மசீச, கெராக்கான் மற்றும் பார்ட்டி பூமிபுத்ரா பெர்காசா மலேசியா, தமிழர் சங்கம் உட்பட 14 பேர் பிரதிவாதிகளாக வழக்கில் இடம் பெற்றுள்ளன. தாய்மொழிப் பள்ளிகள் தேசிய கல்விமுறையின் ஓர் அங்கம் என்றும் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தை அப்பள்ளிகள் எந்த வகையிலும் மீறவில்லை என்று அரசாங்கம் சார்பில் வாதாடிய மூத்த கூட்டரசு வழக்கறிஞர் நற்குணவதி சுந்தரேசன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலி முன்னிலையில் நடைபெற்று வரும் இவ்வழக்கு இன்றும் தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 10 =