தாத்தா, பாட்டியை உயிரோடு எரித்துக்கொன்றது ஏன்?- கைதான சிறுவன் பரபரப்பு வாக்குமூலம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் காட்டு ராஜா (வயது 75). இவருடைய மனைவி காசி அம்மாள் (65). கடந்த 12-ந் தேதி இரவு இவர்களது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.இதில் 2 பேரும் உடல் கருகி பலியானார்கள். தாத்தா, பாட்டியை தீ வைத்து உயிரோடு எரித்துக்கொன்றது தொடர்பாக அவர்களது 16 வயதுடைய பேரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசில் சிறுவன் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-எனக்கு சரிவர படிப்பு வரவில்லை. அதனால் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்தேன். இதனை எனது பெற்றோர் கூட கண்டிக்கவில்லை. ஆனால் எனது தாத்தாவும், பாட்டியும் எங்களது மூத்த மகன் எப்படி சம்பாதிக்கிறான். எப்படி பிழைக்கிறான் என பார்த்து அவனைப் போலவே பிழைக்க கற்றுக்கொள். எங்காவது வேலைக்கு போ. ஏதாவது தொழில் பழகு, சும்மா சுற்றிக்கொண்டு இருக்காதே என கூறி அடிக்கடி கண்டித்து வந்தனர். மேலும் அடிக்கவும் செய்தனர்.கடந்த 12-ந் தேதி இரவு நான் மது அருந்திவிட்டு கொத்தாம்பாடி ஆற்றோரத்தில் பீடி புகைத்துக்கொண்டு இருந்தேன். அப்போது அங்கு வந்த எனது பாட்டி என்னை துடைப்பத்தாலும், குச்சியாலும் அடித்ததுடன், கடுமையான வார்த்தைகளால் திட்டினார். எனது நண்பர்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் என்னை அவமானப்படுத்தியது. இதனால் தாத்தா-பாட்டி இருவரையும் கொல்ல முடிவு செய்தேன்.இதற்காக எங்கள் வீட்டில் இருந்த 2 லிட்டர் மண்எண்ணெய் மற்றும் ஒரு பூட்டையும் எடுத்துக்கொண்டு தாத்தா, பாட்டி வீட்டுக்கு சென்றேன். அங்கு 2 பேரும் தூங்கியபின் வீட்டின் வெளிப்புறம் கதவை பூட்டினேன். அந்த வீடு கூரை வீடு என்பதால், மண்எண்ணெயை கூரை மீது ஊற்றி தீ வைத்து விட்டு ஓடிவிட்டேன். தீயில் கருகி 2 பேரும் இறந்து விட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி என்னை பிடித்து விட்டனர்.இவ்வாறு சிறுவன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளான். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிறுவனை போலீசார் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 14 =