தலைவா விரைவில் தலைமை ஏற்க வா! அன்வார் பிறந்தநாளில் ஆதரவாளர்கள் கோஷம்

உலக அரசியல் அரங்கில் பெரிதும் மதிக்கப்படும் கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தமது 73 ஆவது பிறந்தநாளை மிக எளிமையாகக் கொண்டாடினார்.
மலேசியாவில் லட்சக் கணக்கான தொண்டர்களின் மாபெரும் தலைவராக விளங்கிக் கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வாருக்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
தனது வாழ் நாள் முழுவதும் ஒரு போராட்டவாதியாகவே இவர் விளங்கிக் கொண்டிருக்கிறார். மலேசியா மட்டுமின்றி உலக அரங்கில் தனிச் சிறப்புப் பெற்ற உன்னதத் தலைவர்களில் இவரும் ஒருவராவார்.


அடிமட்டத் தொண்டனாக இருந்து பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக உயர்ந்து நாட்டின் துணைப் பிரதமராக அலங்கரித்தவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆவார்.
அரசியல் சூழ்ச்சிகளினால் துணைப் பிரதமர் பதவி பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு சிங்கம்போலவே கர்ஜித்தார்.
இவர் தோற்றுவித்த கெஅடிலான் கட்சி இன்று நாட்டில் ஒரு பலம் வாய்ந்த கட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. கூடவே இருந்த நண்பர்கள் குழிபறித்தாலும் எதையும் தாங்கிக் கொள்ளும் நெஞ்சுரம் கொண்டவராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளங்குகிறார்.
மலேசிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவராகவும் விளங்கிக் கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தமது 73ஆவது பிறந்தநாளை பெட்டாலிங் ஜெயா ஜாலான் காசிங்கில் உள்ள தமது அலுவலகத்தில் எளிமையாகக் கொண்டாடினார்.
டத்தோஸ்ரீ அன்வார் மீது அன்பும் பாசமும் கொண்டிருக்கும் அவரது ஆதரவாளர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.


ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவரும் தமிழ் மலர் குழுமத் தலைவருமான செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தலைமையில் தமிழ் மலர் குடும்பத்தினர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு மாலை அணிவித்து அனிச்சல் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினர்.
தமிழ் மலர் நாளிதழின் நிர்வாக இயக்குநர் டத்தோ எஸ்.எம்.பெரியசாமி, சட்ட ஆலோசகர் சரஸ்வதி கந்தசாமி, பினாங்கு மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட காளியம்மன்ஸ் உணவக உரிமையாளர் மாராயி கந்தசாமி ஆகியோரும் டத்தோஸ்ரீ அன்வாருக்கு மாலை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் பலரும் டத்தோஸ்ரீ அன்வாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து தங்களது அன்பைப் புலப்படுத்திக் கொண்டனர்.
இதனிடையே அவரது பிறந்தநாளின் போது, தனது போர்ட்டிக்சன் தொகுதியில் உள்ள ஆதரவற்றவர்களுக்கான இல்லத்தில் வசிப்பவர்களுக்கு போக்குவரத்து சேவைக்காக மோல்லி சேவை மைய வாகனம் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
வாகனத்தை மறைந்த தனது மனைவியின் நினைவாகவும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் சேவைக்கு பயன்படுத்த இந்த வாகனத்தை வழங்குவதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.


மேலும் அவரது பிறந்தநாள் நாடாளுமன்றத்தில் கொண்டாடப்பட்டது. அவரது மனைவி டத்தோஸ்ரீ வான் அஸிஸாவுடன் சேர்ந்து அன்வார் அனிச்சல் வெட்டினார். இந்நிகழ்ச்சியில் பிகேஆர் கட்சியின் பட்டதாரி குழுவினர் கலந்து கொண்டு அன்வார் இப்ராஹிமிற்கு தங்கள் வாழ்த்தினை தெரிவித்தனர். அதில் இந்தோனேசியா, பாலி மருத்துவ பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் வந்திருந்து அவரை வாழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் பிகேஆர் கட்சியின் இந்தியர்களின் பிரதிநிதியான சுரேஷ்குமார் மற்றும் அதன் உச்சமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − three =