தலைநகரில் வெள்ளம் ஏற்படுவதற்கு ஸ்மார்ட் சுரங்கப்பாதை காரணமல்ல

தலைநகரில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்கு ஸ்மார்ட் சுரங்கப் பாதை ஒரு காரணமல்ல என்று நீர்ப்பாசன இலாகாவின் தலைமை இயக்குநர் நோர் ஹிஷாம் முகமட் கஸாலி தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் தலைநகரில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தினால் ஆயிரக் கணக்கான வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
ஸ்மார்ட் சுரங்கப்பாதை இயங்காததுதான், வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் சுரங்கப்பாதை எப்போதும் போல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றார் அவர்.
வழக்கத்திற்கு மாறாக பெய்த அடைமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கால்வாய்களிலும் அதிகளவில் வெள்ளம் நிரம்பி வழிந்தது.
பல மணி நேரம் பெய்த மழையால் தலைநகர் முழுவதும் வெள்ளக்காடானது. இது யாரும் எதிர்பார்க்காத ஓர் அடை மழையாகும்.
190 கோடி வெள்ளியில் கட்டப்பட்டிருக்கும் ஸ்மார்ட் சுரங்கப்பாதை ஒரு மணி நேரம் கழித்தே இயங்கியதுதான் இந்த வெள்ளப் பெருக்கிற்குக் காரணம் என்று கூறப்பட்டது.
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இந்த ஸ்மார்ட் சுரங்கப் பாதை சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது. கடுமையான வெள்ளத்தினால்தான் தலைநகர் வெள்ளக் காடாகக் காட்சியளித்தது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =