தமிழ் பாலர் பள்ளி எங்களின் தூர நோக்கு இலக்கு அரிமா மலாக்கா மாநிலத் தலைவர் டத்தோ பேசில் பேச்சு

தமிழ்ப் பள்ளியில் உள்ள பாலர் பள்ளிகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கம் அரிமாவின் தலைவர் ஓம்ஸ் பா. தியாகராஜனின் தூர நோக்கு இலக்கு என்று மலேசிய சமூகநல மறுமலர்ச்சி இயக்கத்தின் மாநிலத் தலைவர் டத்தோ க. பேசில் கூறினார்.
பெரு வெள்ளத்தால் சேதமடைந்து, சேறும் சகதியுமாகக் கிடக்கும் டுரியான் துங்கால் தமிழ்ப் பள்ளியைப் பார்வையிடச் சென்றிருந்தபோது, நிருபரிடம் பேசில் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் அதிகரிக்க வேண்டும் என்றால் முதலில் நம்முடைய கவனக் குவிப்பை தமிழ் பாலர் பள்ளியில் செலுத்த வேண்டும்.
தற்போது மலாக்கா மாநிலத்தில் 21 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. 11 பாலர் பள்ளிகள் உள்ளன. பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு முன் தமிழ் பாலர் பள்ளிகளில் அவர்களைச் சேர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தமிழ்ப் பள்ளியில் இயங்கும் பாலர் பள்ளிகளை உலகத் தரம் வாய்ந்த கற்றல் கற்பித்தலால் பலப் படுத்தினால் நம் தமிழ்ப் பள்ளி முதல் தேர்வாகும். இதனைக் கருத்தில் கொண்டுதான் அரிமா பள்ளிக் களத்தில் இறங்கி இருப்பதாகப் பேசில் கூறினார்.
காடெக் சட்டமன்ற உறுப்பினர் க. சாமிநாதன், பள்ளித் தலைமை ஆசிரியர், சபரி பிந்தி முஹிடீன், முதன்மை உதவி ஆசிரியர் சாந்தி ராமன், புறப்பாட முதன்மை உதவி ஆசிரியர் ஸ்ரீ கங்காதரன், மாணவர்கள் விவகாரப் பிரிவு முதன்மை உதவி ஆசிரியர் எம்.சாரதா, பாலர் பள்ளி ஆசிரியர் எஸ்.வாருணி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சு.சந்துரு, பெ.ஆ.சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் என். கண்ணன், அரிமா இயக்கத்தின் மாநிலச் செயலாளர் சைமன் அந்தோணி, மாநில உதவித் தலைவர் த.பாஸ்கரன், அரிமா செயற்குழு உறுப்பினர் ச. ஹென்றி ஆகியோருடன் அரிமா பாலர் பள்ளிக்கான திட்டம் குறித்து விளக்கமளித்தார் பேசில்.
“அரிமா ஒரு அரசு சாரா இயக்கம். இதன் அடிப்படையில் நாம் இங்கே ஒன்று பட்டு பள்ளிக்கு உதவ முன்வந்துள்ளோம். தமிழ் மொழி, தமிழ்ப் பள்ளி, கலை கலாசாரம் என்பது அரிமாவின் சேவை மொழி. எங்களிடம் அரசியல் மொழி கிடையாது. தலைமை ஆசிரியர் முன் வைத்திருக்கும் உடனடித் தேவைகளை முக்கியமாக பாலர் பள்ளியின் வளர்ச்சிக்கான நீண்ட கால திட்ட அடிப்படையிலான தேவைகளைக் கருத்தில் கொண்டுள்ளோம். சக்திக்கு உட்பட்ட உதவிகளைக் கண்டிப்பாக செய்து கொடுப்போம். அதற்கு முன் இந்த வெள்ளப் பிரச்சினை மீண்டும் எழாது என்ற உறுதிப்பாடு தேவை. காரணம் வழங்கப்படும் உதவிகள் மீண்டும் வெள்ளத்தால் சேதமடையாமல் இருப்பதை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று பேசில் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கூறுகையில், பாலர் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நவீன முறையிலான தொழில் நுட்பம் கொண்ட கற்றல் கற்பித்தல் முறை அவசியமாகிறது. அதனை பாலர் பள்ளியிலிருந்து தொடங்குவது தற்காலத் தேவையாகிறது. இவ்வாண்டு 2.9 விழுக்காடு தமிழ் மாணவர்கள் சீனப் பள்ளிக்குச் சென்று விட்டனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 1.7 சதவீதம் அதிகமாகும். இவர்களை எப்படி நம் பள்ளிக்கு ஈர்ப்பது? ஒரே வழி அங்கு கிடைக்காத கல்வி முறையை இங்கே அறிமுகப்படுத்துவதுதான் சிறந்த வழி என்றார் பேசில்.
எதிர்காலத்தில் தமிழ்ப் பள்ளிக்குப் புதிதாகப் பதியும் முதலாம் மாணவர்களுக்கு உடை, புத்தகப்பை இலவசமாக வழங்கப்படும் என்று பேசில் அறிவித்தார். மேலும், அரிமா மலாக்கா மாநிலத் உதவித் தலைவர் பாஸ்கரன் இப்பள்ள்ளிக்கு பூப்பந்து மட்டை மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
தமிழ் வாழவேண்டும், தமிழ்ப்பள்ளி உயர வேண்டும் எனும் உயர்ந்த நோக்கங்களைக் கொண்ட உயர்ந்த மனிதர், அரிமா அறவாரியத்தின் நிறுவனரும், தேசியத் தலைவருமான ஓம்ஸ் பா. தியாகராஜனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்ட பேசில், சமுதாயத்துக்குச் சேவை செய்யும் வாய்ப்பை அறவாரியத்தின் வாயிலாக தமக்கு வழங்கியிருப்பது நினைத்து மனம் நெகிழ்வதாகத் தெரிவித்தார்.
காடெக் சட்டமன்ற உறுப்பினர் க. சாமிநாதன் கூறுகையில், அரிமாவின் இப்புதிய திட்டமானது தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கு ஒரு ஊன்றுகோலாக இருக்கும் என்றார்.
“மேலும், நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் மற்றும் இந்திய மாணவர்களின் வளர்ச்சிக்காக அரிமா மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பாராட்டுக்குரியது. இந்திய சமுதாயத்தின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் ஓம்ஸ் பா. தியாகராஜனின் முயற்சிகள் மென்மேலும் தொடர வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
உயிருக்கு நிகரான தமிழ்ப் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்வோம். இதுவே அரிமாவின் பயணம் என்கிறார் பேசில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here