தமிழ்மொழி மனிதனை நெறிப்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது – காமாட்சி நெகிழ்ச்சி

0

தமிழ் வளர்ச்சிக் கழகமும், உலகத் தமிழ் கல்வி கழகமும் இணைந்து நடத்திய இளங் கலை தமிழியல் பட்டமளிப்பு விழா அண்மையில் மலாயா பல் கலைக்கழகத்தில் நடைபெற்றது.
பல காரணங்களினால் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல முடியாதவர்களுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாக உள்ளது. தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மல்லிகா மிகச் சிறப்பாக இந்த மாணவர்களுக்கு போதித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதாகையில் தமிழில்லை… அங்கே தமிழில்லை… இங்கே தமிழில்லை… என்று பிதற்றிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் பிழைப்புக்காக இல்லாமல் வாழ்க்கைக்கு தமிழ்மொழி மிக முக்கியம் என இந்த நிகழ்ச்சியில் பட்டம் பெற்றவர்கள் உணர்த்தியுள்ளனர்.
62 வயது பெண்மணி மற்றும் 72 வயது பெரியவர் உள்ளிட்ட 15 பேர் இந்த நிகழ்வில் பட்டம் பெற்றனர். இவர்களைப் போன்றவர்கள் உள்ளவரை நம் தமிழ்மொழியை அசைக்க முடியாது என சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு கூறினார்.
இயக்கத்தின் தலைவர் மல்லிகா பல சிரமங்களுக்கிடையில் தனது தமிழ்ப் பணியை ஆற்றி வருகிறார். அவருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு இதுபோன்ற நல்ல திட்டங்களுக்கு அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு தேவை என்பதை உணர்வதாகவும் அவர் கூறினார்.
நாடு தழுவிய நிலையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வற்றாத ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மொழி, கலை, கலாசாரம், பண்பாடு ஆகிய கூறுகளைக் காக்கும் இயக்கங்களுக்கு ஆதரவு தந்து அவர்களின் செயல் திட்டங்களில் பங்கெடுப்பதில் சமுதாயத் தலைவர்கள் அக்கறை காட்ட வேண்டும். இந்த நிகழ்வில் பட்டம் பெறும் பலர் இளைஞர்களாக உள்ளனர். மொழி வளமும் இலக்கிய ஆர்வமும் கொண்ட இவர்கள் சமுதாயத்திற்கு பெரும் பங்காற்ற முடியும்.
எந்த நிலையிலும் இவர்கள் வழிதவற வாய்ப்பே இல்லை. காரணம் தமிழ்மொழி மனிதனை நெறிபடுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது.
இவர்களைப் போல் இன்னும் பலர் உருவாக தலைவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இது பல சமுதாய பிரச்சினைகளைக் களை யெடுக்க வாய்ப்பாக அமையும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 5 =