தமிழ்மலர் நிறுவனர் அருள்மாமணி என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளை நினைவுகள்

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மலாயாவில் தோட்டங்களை நிர்வகித்து வந்த ஆங்கிலேயர் நிறுவனங்கள் தாங்கள் நிர்வகித்து வந்த தோட்டங்களை விற்க முற்பட்டனர். பினாங்கு மாநிலத்தில் குறிப்பாக தென் செபராங் மாவட்டத்தில் உள்ள தோட்டங்களை (பினாங்கு ரப்பர் தோட்ட நிர்வாகம்) விற்றுவிட முற்பட்டது. சூழ்நிலைகளை தமக்கு சாதகமாக ஆக்கிக் கொள்பவனே சிறந்த சாதனையாளன்.
ஆக, அந்த அருமையான வாய்ப்பை ஏழையாக ஆனால் கோழையாக இல்லாத அருள்மாமணி திரு.என்டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை அவர்கள் துணிந்து அத்தோட்ங்களை வாங்கியும் விற்றும் தம் வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார் . அதன் பயனாக இந்த நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்கு ஆற்றியதோடு தம் சொந்த வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக் கொண்டார்.
பதினொரு தோட்டங்களை வாங்கி அவற்றை நிர்வகிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அது மாபெரும் சாதனையாகும். அருள்மாமணி ஒரு சாதனையாளர் என்பதற்கு காரணம் அன்னாரின் நடைமுறை வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலும் அவர் தன் முத்திரையைப் பதித்துள்ளார்.

பெருநிலக் கிழார் ஆறுமுகம் பிள்ளை வாங்கிய
தோட்டங்கள் வருமாறு:

வெல்லெஸ்லி தோட்டம், ஜூரு தோட்டம், ஜாவி தோட்டம், கலிடோனியா தோட்டம், செங்காட் தோட்டம், பைராம் தோட்டம், கிரியான் தோட்டம், டிரான்ஸ் கிரியான் தோட்டம், அம்பா தோட்டம், ஜுவாரா தோட்டம், யுபி தோட்டம் ஆகிய தோட்டங்களை வாங்கி துண்டாடுதல் வழி தம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திக் கொண்டார். யுபி தோட்டம் (யுனைட்டெட் பட்டாணி) தோட்டம் மட்டும் துண்டாடலுக்கு இலக்காக வில்லை. அதற்கு முக்கிய காரணம் அந்த நேரத்தில் அவருடைய பொருளாதாரம் நன்றாக இருந்தது . அவர் வாங்கிய தோட்டங்களில் பைராம் தோட்டம் மட்டும் தென்னை மரங்கள் கொண்ட தோட்டம் மற்றவையாவும் ரப்பர் மரத் தோட்டங்களே.
ஆலயங்கள், தமிழ்ப் பள்ளிகள், மைதானம் போன்றவை அவருடைய பராமரிப்புக்கு வந்தன, குறிப்பாக தமிழ்ப்பள்ளிகள் மீது அதிக கவனம் செலுத்துவதற்கு அவரே நிர்வாகக் குழுத் தலைவராக பணியாற்றினார், கிரியான் தோட்டம், டிரான்ஸ் கிரியான் தோட்டம், ஜாவி தோட்டம், ஜுரு தோட்டம் ஆகியவை அவர் நிர்வாகக் குழுத் தலைவர் பொறுப்பில் இருந்தவை.
தோட்டங்களுக்கிடையே நல்ல நட்புறவு வளர பள்ளிகளுக்கிடையே ஆண்டுக்கொரு முறை விளையாட்டுப் போட்டிகள் நடத்தியுள்ளார் . இதில் ஜூரு தோட்ட தமிழ்ப்பள்ளி, கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி, டிரான்ஸ் கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளிகள் கலந்து சிறப்பிக்க ஆவன செய்வார். பெரும்பாலும் இந்த விளையாட்டுப் போட்டிகள் ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி மைதானத்தில் நடைபெறும். பெற்றோர்களும் ஒரு சில விளையாட்டில் கலந்து மகிழ்வர். கல்விக்காக திரு.என். டி. எஸ் அவர்கள் செய்தவை எண்ணிலடங்கா.
இங்கு மட்டும் அல்ல. தமிழ் நாட்டிலும் ஒரு பல்கலைக்கழகம் கட்டி அதில் நமது நாட்டு மொழியினை அங்கு ஒரு பாடமாக எடுக்க வழி செய்துள்ளார். ஆக தமிழ் நாட்டில் மலாய் மொழியைப் போதிக்கும் ஒரே பல்கலைக்கழகம் அவர் தலைமையில் இயங்கிய பல்கலைக்கழகம் என்றால் மிகையாகாது. இதிலிருந்து நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நிலக்கிழார் அவர்கள் இந்த நாட்டின் மேல் உள்ள பற்றை அந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள மலாய் மொழித் துறை பறைசாற்றுகிறது.
தொடர்ந்தாற் போல் அருள்மாமணி புக்கிட் பஞ்சோர் வாழ் முஸ்லிம் சகோதரர்களுக்காக நான்கு ஏக்கர் நிலம் வழங்கி அவர்கள் தொழுவதற்கு பள்ளிவாசல் கட்டி இடுகாட்டிற்கும் வழி வகுத்தார். எம்மதமும் சம்மதம் என்று நிரூபித்தார்.
அதுமட்டும் அல்ல. இருபது எக்கர் நிலத்தை நம் இந்தியர் சமுதாயத்திற்காக கிரியான் தோட்டத்தில் ஜாலான் புக்கிட் பஞ்சோர் என்னும் இடத்தில் வழங்கியது வரலாற்றில் பெரும் பங்கு வகித்துள்ளார். அவர் தொழில் அமைச்சுக்கு வழங்கிய அந்த இருபது ஏக்கர் நிலத்தில் இந்தியர்களுக்கு ஒரு முதியோர் இல்லம் இயங்கச் செய்தார் – சமீப காலத்தில் கைவிடப்-பட்ட முதியோர்கள் இல்லாமல் போகவே இப்பொழுது அந்த நிலத்தில் இளைஞர்களுக்கான கைத் தொழில் கல்லூரி அருள்மாமணி பெயராலேயே இயங்கி வருகிறது. .
(ஐடுஞ, ஹசரஅரபயஅ ஞடைடயi) அங்கு அதிகமான இந்திய மாணவர்கள் கைத்தொழில் கற்று வருகிறார்கள் . இவை அருள்மாமணி செய்த சாதனைகளுக்கு இன்றும் இனியும் பெயர் சொல்லும்.
இத்தனைத் துறைகளில் பீடு நடை போட்ட அருள்மாமணி அவர்கள் அரசியல் துறையையும் விட்டபாடில்லை. பினாங்கு மாநில மலேசியன் இந்தியன் காங்கிரஸ் தலைவராக ஏற்று வழிநடத்தியுள்ளார். மத்திய செயலவையிலும் உறுப்பியம் பெற்று கூட்டுறவு தந்தை துன் வீ தி சம்பந்தன் அவர்களுக்கு நல்லாதரவு நல்கியுள்ளார் என்பது வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து காணலாம். அவரைத் தொடர்ந்து வந்த மாநிலத் தலைவர் டத்தோ சுப்பையா அவர்கள் அருள்மாமணி வழித் தோன்றலே என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும்.
தமிழ்ப்பள்ளிகளைப் பராமரிக்கும் அதே வேளையில் இந்த நாட்டில் தமிழ் மலர், தினமணி என்ற தினசரி நாளிதழ் ஒன்றைப் பல்வேறு சவால்களுக்கிடையே நடத்தினார். எழுத்தாளர்கள், கவிஞர்கள் பள்ளி குழந்தைகள் அந்த நாளிதழ் வழி தங்கள் தமிழறிவை வளர்த்துக் கொள்ள வழி செய்தார் இவ்வாறு தமிழ் இலக்கியம் வாழ வளர தமிழ் மலர் பத்திரிகை பங்காற்றியுள்ளது.
பினாங்கு தீவில் கணேஸ், அச்சகம் என்று ஒன்றைத் திறந்து வட பகுதி தமிழர்களுக்கு வசதியாக நடத்தியுள்ளார். ஆலயங்கள், பொது இயக்கங்களுக்கு இலவசமாக அச்சடித்துக் கொடுப்பதும் உண்டு.
அருள்மாமணியின் முன்னேற்றப் பாதையில் சமூகவியல் முன்னேற்றமும் உடன் வந்து அவர் புகழ் பரப்பி சங்கு முழங்கின. புக்கிட் மெர்தாஜம் மங்கள நாயகி அம்மன் ஆலயத்தில் தம் துணைவியார் பெயராலே சீதையம்மாள் கல்யான மண்டம் கட்டி சமுதாயச் சிக்கல்களைச் சீர்படுத்தினார். அவ்வட்டார மக்களுக்கு ஒரு கல்யாண மண்டபம் இல்லாத குறையை அருள்மாமணி தீர்த்து வைத்ததோடு நிபோங் திபால் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலும் தம் துணைவியார் பெயராலேயே ஒரு மண்டபம் கட்டி அங்கு வாழ் மக்களுக்கு நல்லதோர் வசதியை வழங்கியுள்ளார்.
அவர் பெயர் நின்று நிலைக்க ஜாவி தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு மூன்று ஏக்கர் நிலமும் ஜாவி ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திற்கு ஒரு ஏக்கர் நிலமும் வழங்கி வள்ளல் அருள்மாமணி அந்த தெய்வ சக்திக்கும் சமூகச் சக்திக்கும் அரும் பெருந் தொண்டு செய்து சாதனைப் படைத்தார். இந்த அரும் பெரும் தொண்டுகளைப் பாராட்டி புக்கிட் மெந்தாஜம் பட்டணத்தில் ஒரு சாலைக்கு அவர் பெயரை வைத்து கௌரப்படுத்தியுள்ளது .
(ஜாலான் ஆறுமுகம் பிள்ளை) ‘தோன்றிற் புகழோடு தோன்றுக’ என்ற வள்ளுவன் வாக்குக்கிணங்க அருள்மாமணி வாழ்ந்தார். என்பதற்கு மேலே குறிப்பிட்டுள்ள சான்றுகள் போதுமானவை – இன்னும் எத்தனையோ காரியங்கள் அல்லது நடவடிக்கைகள் விடுபட்டு போயிருப்பினும் இறை பக்தியும் மனித நேய பக்தியும் அருள்மாமணி என்பதை அவர் சாதனைகள் பறைசாற்றிக் கொண்டு தான் இருக்கின்றன. அருள்மாமணி தாம் உயர்ந்த நிலையில் இருந்த போதும் அவர் நடந்து வந்த பாதையை ஒரு போதும் மறந்ததில்லை. கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்துப் பாடம் படித்த மாமனிதர் அருள்மாமணி அவர்கள்.
‘தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று’ என்ற குறளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் மாமனிதர் அருள்மாமணி என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளை என்றால் அது மிகையாகாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × five =