தமிழ்ப் பெண்களின் உரிமைப் போராட்டவாதி
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

உலகத் தமிழ்ப் பெண்களின் வாழ்வியலில் புரட்சிப் புதுமைகளுக்கு வழிவகுத்த மாபெரும் மாதரசி. தேவதாசி முறையை அழிப்பதற்கு முன்னோடியாக விளங்கிய தனிப்பெரும் மணியரசி. தமிழர்களின் மூடப் பழக்க வழக்கங்களை எதிர்த்துப் போராடி எரித்துப் போட்ட எழில்மிகு பெண்ணரசி. சாதிகளையும் சம்பிரதாயங்களையும் எதிர்த்துப் போராடி பல புரட்சித் திருமணங்களை நடத்திக் காட்டிய புரட்சிப் பெண்மணி. அவர்தான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.

பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை; புரட்சி இல்லையேல் பெண் விடுதலை இல்லை என்று சொல்வார்கள். உண்மைதான். புரட்சி என்பது பற்பல கோணங்களில் பயணித்தாலும் பெண்களின் விடுதலைக்குப் போராடிய பெண்புலிகளை நாம் என்றைக்கும் மறந்துவிடக் கூடாது.

பெண்களின் உரிமைகளுக்காகவும்; பெண்களின் விடுதலைக்காகவும்; பெண்களின் விழிப்புணர்வுக்காகவும் போராடிய பெண்கள் அனைவருமே பெண்புலிகள் தான். மாற்றுக் கருத்துகள் இல்லை. ஈழத்துப் பெண்புலிகளின் பயணம் வேறு. அவர்களின் இலக்கு வேறு.

இனவாதக் குதிரையில் சவாரி செய்வதும் ஒன்று தான். இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்வதும் ஒன்று தான். அதுதான் இங்கேயும் நடக்கிறது. விடுங்கள். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் வரலாற்றுக்கு வருவோம். இந்த உலகமும் சரி; இந்த உலகில் வாழும் தமிழர்களும் சரி; மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் என்கிற தூயத் தமிழ்ப் பெண்ணை மறக்கக் கூடாது. வரலாற்றில் இருந்து அவர் மறைந்து விடவும் கூடாது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி; அன்னி பெசண்ட் அம்மையார்; தில்லையடி வள்ளியம்மாள்; வை.மு.கோதநாயகி; ருக்மிணி லட்சுபதி; அமி கம்மிகா யேல்; கடலூர் அஞ்சலையம்மாள்; தருமாம்பாள்; நீலாம்பிகை; மலர்முகத்து அம்மையார்; தாமரைக் கண்ணியார் போன்ற பெண் தெய்வங்களும் அந்தப் பட்டியலில் இடம் பெறுகிறார்கள். மறந்துவிட வேண்டாம். சரி.

பன்மொழி ஆளுமைத் திறன்; தன்னம்பிக்கை; தெளிந்த சிந்தனை; அநீதியை எதிர்க்கும் ஆவேசம்; பெண்ணினத்தை மீட்டு ஆண்களுக்குச் சரி சமமாகச் சமுதாயத்தில் வாழ வைக்க வேண்டும் என்கிற அயராத உழைப்பு; தள்ளாத வயதிலும் தளராத நடை; இவற்றின் மொத்த உருவமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர் இராமாமிர்தம் அம்மையார்.

1920-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் தேவதாசி முறையை எதிர்த்துப் போராட்டங்களைத் தொடங்கினார். ஊர் மேடைகளில் எரிமலையாய் வெடித்தார். பெண் உரிமைகளுக்கு உயிர்க் கொடுத்துப் போராடினார். தேவதாசிப் பெண்களின் இழிவான வாழ்க்கை முறையை எதிர்த்துப் போராடினார்.

1925-ஆம் ஆண்டு மாயவரத்தில் நடந்த மாநாட்டில் தேவதாசிகள் பலரை அழைத்தார். தெய்வத்தின் பெயரில் கட்டிய பொட்டு என்று பலரின் பொட்டுகளை அறுத்து எறிந்தார். அந்த மேடையிலேயே அவர்களுக்குத் திருமணங்களையும் நடத்தி வைத்தார். பல பெண்களின் வாழ்க்கையில் விடிவெள்ளியாக விளங்கினார்.

மூவலூர் இராமாமிர்தம் (பிறப்பு: 1883 – மறைவு: 1962) இவர் ஒரு பெண் சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், முன்னாள் தேவதாசி ஒழிப்பு இயக்கத்தைச் சேர்ந்த அரசியல் முன்னோடி. தஞ்சை மாவட்டத்தில் கீரனூர் அருகில் பாலூர் என்கிற நகரம். அங்கு 1883-ஆம் ஆண்டில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் கிருஷ்ணசாமி; சின்னம்மாள்.

கிருஷ்ணசாமிக்கு இரண்டு சகோதரிகள். அந்தக் காலக் குலமரபுப் படி குடும்பத்தின் மூத்த பெண் பிள்ளைகளைப் ‘பொட்டு’ கட்டி தேவதாசி ஆக்குவது வழக்கம். அவர்களின் அடுத்த தலை முறைக்கும் ஒரு பெண் தேவதாசி வாரிசு தேவைப் பட்டது. கிருஷ்ணசாமியின் சகோதரிகளுக்குக் குழந்தைப் பேறு இல்லை. அதனால் கிருஷ்ணசாமியின் மகளைத் தத்து எடுத்து ‘பொட்டு’ கட்டித் தாசியாக மாற்ற எண்ணினார்கள். அதற்கு கிருஷ்ணசாமி மறுத்து விட்டார். எனவே அவர் குடும்பத்தை அவர்களின் சமூகத்தில் இருந்து விலக்கி வைத்தார்கள்.

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள் சிலர் இப்படித்தான் மூட நம்பிக்கையில் அறிவு கெட்டு; முட்டாள் தனமாக வாழ்ந்து இருக்கிறார்கள். இப்படி எழுதுவதற்காக மன்னிக்கவும். வேறு எப்படி எழுதலாம் என்று நீங்களே சொல்லுங்கள். பெற்ற மகளைப் பொட்டு கட்டி விடுவதற்கு எந்த அப்பனுக்குத் தான் பிடிக்கும். சொல்லுங்கள். அதைத்தான் ஓர் அப்பா செய்து இருக்கிறார். அது சாதிச் சமுகக் குற்றம் என்றும் சொல்லி அவரையும் அவரின் குடும்பத்தையும் ஒதுக்கி வைத்து இருக்கிறார்களே. சரி. பொட்டுக் கட்டுதல் என்றால் என்ன?

சின்னஞ் சிறிசு பெண்களுக்கு அதாவது சிறுமிகளுக்கு தாலி அணிவிக்கும் சடங்கு தான் பொட்டுக் கட்டுதல். ஒரு சிறுமிக்குத் தாலி அணிவிக்கப் பட்டதும் அந்தச் சிறுமி கடவுளைத் திருமணம் செய்து கொண்டதாக்க கருதப் படுவார். அதனால் அந்தச் சிறுமி வளர்ந்த பின்னர் அவள் வேறு ஓர் ஆடவனைத் திருமணம் செய்து கொள்ள முடியாது.

அப்புறம் எப்புடி? சாமி கண்ணை குத்துமே. இது அந்தக் காலத்துத் தமிழர்களின் மரபுவழி மூடத் தனம். திருத்திக் கொள்ளுங்கள். முட்டாள் தனம். எந்த வயதில் பொட்டுக் கட்டப்பட வேண்டும் என்பது ஆளுக்கு ஆள்; ஊருக்கு ஊர்; கோயிலுக்கு கோயில் மாறுபடும்; அந்தக் காலத்தில் அதாவது தேவதாசி தடைச் சட்டம் வருவதற்கு முன்னர், சிதம்பரம்; திருவாரூர்; திருவிடைமருதூர் போன்ற ஊர்களில் ஐந்தில் இருந்து எட்டு வயதுக்குள் பொட்டுக் கட்டுதல் செய்து விடுவார்கள்.

தஞ்சாவூரில் கொஞ்சம் மாற்றம். ஒரு பெண் வயதுக்கு வந்த பின்னர் தான் பொட்டுக் கட்டும் சடங்கைச் செய்வார்களாம். ஆக ஒரு பெண்ணின் கழுத்தில் தாலியை அணிவிப்பதுதான் பொட்டுக் கட்டுதல் ஆகும். புரியுதுங்களா. மூவலூர் இராமாமிர்தம் அவர்களின் தந்தையார் கிருஷ்ணசாமியை ஊரை விட்டு விலக்கி வைத்தார்களே அந்தக் கதைக்கு வருவோம்.

கிருஷ்ணசாமியும் குடும்பம் வறுமையில் வாடியது. இந்த நிலையில் அவர் ஊரை விட்டே போக வேண்டிய நிலை. வறுமையில் சிக்கிய மனைவி சின்னம்மாள் தன் தாய் வீட்டுக்குச் சென்று வாழ்ந்து வந்தாள். ஐந்து ஆண்டுகள் கழிந்தன. சின்னம்மாளின் தாயாரும் காலமானார். சின்னம்மாள் வாழ்க்கையில் மேலும் சிக்கல்கள். அந்தச் சமயத்தில் சென்னையில் இருந்து சின்னம்மாளுக்கு ஒரு கடிதம் வந்தது.

அதில் கிருஷ்ணசாமி அவர் ஒரு வீட்டில் சம்பளம் இல்லாமல் கூலி வேலை; மூன்று நேரம் சாப்பாடு மட்டும் கிடைப்பதாக எழுதி இருந்தார். அதைப் பார்த்த சின்னம்மாள் தானும் அங்கு வருவதாகப் பதில் கடிதம் எழுதினார். ஆனால் சென்னைக்குப் போவதற்குப் பணம் இல்லை. வேறு வழி தெரியாமல் சின்னம்மாள் தன் ஐந்து வயது குழந்தையை ஆச்சிக்கண்ணு எனும் ஒரு தாசியிடம் விற்று விட்டாள். அந்தப் பெண் குழந்தைதான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.

குழந்தையை விற்ற காசு ஒரு பத்து ரூபாய் நோட்டு. கட்டிக் கொள்ள ஒரு பழைய புடவை. அந்தக் காலத்தில் வறுமை எப்படி எல்லாம் தாண்டவம் ஆடி இருக்கிறது. கற்பனை செய்து கொள்ளுங்கள். பத்து ரூபாய்க்காக தன் மகளை விற்று இருக்கிறார். ஆனாலும் தாயார் சின்னம்மாள் வேறு மாதிரியாகப் பார்த்தார். தன்னால் தான் வயிறாரச் சாப்பிட முடியவில்லை. பரவாயில்லை. குழந்தையாவது நன்றாகச் சாப்பிட்டு நன்றாக வாழட்டுமே என்று நினைத்து இருக்கிறார்.

தாசிப்பெண் ஆச்சிக்கண்ணு குழந்தைக்கு ஆடல், பாடல், நாட்டியம், நடனம், என பலவற்றையும் சொல்லிக் கொடுத்தாள். குழந்தையும் எந்தக் கவலையும் இல்லாமல்; எந்தக் கவலையும் அறியாமல் நன்றாகவே வளர்ந்தாள். கொஞ்ச காலம் கழித்து குழந்தைக்கு ‘தண்டியம்’ பிடிக்கும் சடங்கு செய்யப் பட்டது. தண்டியம் பிடித்தல் என்றால் நடன பயிற்சியின் தொடக்க விழா. அதை ஒரு சடங்காக அப்போது செய்தார்கள்.

மூவலூர் இராமாமிர்தம் எனும் குழந்தை, பருவப் பெண்ணாக வளர்ந்தாள். வயது பதினேழு. கோயிலில் ‘பொட்டு கட்டும் சடங்கிற்கு ஏற்பாடு செய்யப் பட்டது. வளர்ப்புத் தாயான தாசி ஆச்சிக்கண்ணும் பஞ்சாயத்தாரிடம் விண்ணப்பம் கொடுத்தார். கோயில் நிர்வாகிகளும் மற்ற மற்ற கோயில் தேவதாசிகளிடம் விசயத்தைச் சொன்னார்கள். கோயில் தேவதாசிகள் முடியாது என்று மறுப்பு தெரிவித்தார்கள்.

ஆச்சிக்கண்ணுவிற்கு இராமாமிர்தம் ஒரு வளர்ப்பு மகள். அதனால் பொட்டுக் கட்ட முடியாது என்று சொன்னார்கள். ஒரு பெரிய கண்டத்தில் இருந்து மூவலூர் இராமாமிர்தம் தப்பித்தார். முதலுக்கே மோசமாகி விட்டதே என்று ஆச்சிக்கண்ணு கலங்கி விடவில்லை. அடுத்த ‘ஸ்டெப்’ எடுத்து வைத்தார். அந்த ஊரில் ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். வயது 69. அந்தப் பெரியவருக்குத் திருமணம் செய்து வைக்கப் பார்த்தார்கள். இராமாமிர்தம் கொப்பளித்துப் போனார்.

அவர் என்னுடைய தாத்தா வயசு. அவருக்கு நானா பெண்டாட்டி. அதெல்லாம் முடியாது என்று மறுத்து விட்டார். நாலு ஏக்கர் நிலத்தையும் இரண்டு கிணற்றையும் எழுதி வைப்பதே பெரியவர் சொல்லி இருக்கிறார். போயா நீயாச்சு உன் கிணறாச்சு என்று முகத்தில் அறையாத குறையாக விரட்டி அடித்து விட்டார். அந்தப் பெரியவருக்குப் பதிலாக தன்னுடைய இசை ஆசிரியர் சுயம்புபிள்ளை என்பவரைத் திருமணம் செய்ய முடிவு செய்தாள். அவருக்கு வயது 46. பல்வேறு எதிர்ப்புகள். வழுவூர் கோயிலில் புரட்சித் திருமணம்.

தாசித் தொழில் செய்யவதற்காக வளர்க்கப்பட்ட ஒரு பெண் மூவலூர் இராமாமிர்தம். ஆனாலும் சாதி சம்பிரதாயங்களை எல்லாம் மீறி திருமணம் செய்து கொண்டது பெரிய விசயம். ஏன் என்றால் இவருக்கு ஏற்கனவே பொட்டு கட்டுவதாக இருந்தது. ஆனாலும் ஒரு சின்ன டெக்னிக்கல் பிரச்சினை. நடக்கவில்லை.

தேவதாசி குடும்பத்தில் வளர்ந்தவள்; தேவதாசி ஐதீகத்தில் வாழ்ந்தவள் திருமணம் செய்வது தப்பு என்று நினைத்தார்கள். சாமி கண்ணைக் குத்திவிடும் என்று பயந்தார்கள். ஆக அவற்றை எல்லாம் தாண்டி திருமணம் நடந்து இருக்கிறது. அந்த வகையில் அது பெரிய ஒரு புரட்சியாகவே அப்போது கருதப் பட்டது. இந்தப் பெண்மணி தான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். பிற்காலத்தில் மூடப் பழக்க வழக்கங்களை எதிர்த்துப் பல புரட்சித் திருமணங்களை நடத்தி வைத்து வரலாறு படைத்தவர்.
மூவலூர் இராமாமிர்தம் நினைவாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் என்று அவரின் பெயராலேயே உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கான திட்டம் 1989-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இன்றும் தமிழக அரசு நடத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண்ணிற்கு மட்டும் திருமண உதவித் தொகை வழங்கப் படுகிறது. பெண்ணின் வயது 18 முடிந்து இருக்க வேண்டும். இவர்களுக்கு ரூபாய் 25,000 மதிப்புள்ள காசோலை மற்றும் 4 கிராம் தங்க நாணயம் வழங்கப் படுகிறது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், தமிழகத்தின் அன்னிபெசண்ட்’ என்று அறிஞர் அண்ணாவால் புகழப் பட்டவர். காந்தியின் கொள்கையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்.

ஆங்கிலேயருக்கு எதிர்ப்புக் காட்ட மூவண்ணக் கொடியை ஆடையாக உடுத்திக் கொண்டவர். கதர் ஆடையை ஊர் ஊராகச் சென்று விற்றவர். காந்தியத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் தன்னுடைய ஓட்டு வீட்டை வேண்டாம் என்று சொல்லி பனை ஓலை குடிசையில் வாழ்ந்தவர்.

1936-ஆம் ஆண்டில் இவர் “தாசிகளின் மோசவலை” எனும் நூலை எழுதினார். அவருடைய வாழ்க்கையின் அவல நிலையை எடுத்துக் கூறும் நூல். அவர் வாழ்ந்த குடிலின் வாசலில் “கதர் அணிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்” என்று எழுதி வைத்து இருந்தார்.

தேவதாசி முறையை ஒழிக்க இவர் மேற்கொண்ட தொடர் பிரசாரங்களும் விழிப்புணர்வுகளும் தான் சென்னை தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற வழிவகுத்தன. அந்தச் சட்டம் 1947-ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. தேவதாசி முறையை ஒழித்தது. ஆனாலும் இன்னும் சில இடங்களில் வாழ்கின்றது.

1938-ஆம் ஆண்டு இந்தி மொழி எதிர்ப்புப் போரில் 42 நாட்கள், 577 மைல் நடைப் பயணம் மேற்கொண்டவர். இந்தப் பயணத்தில் கலந்து கொண்ட ஒரே பெண்மணி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள் தான். 42 நாட்களில் 82 இந்தி எதிர்ப்புக் கூட்டங்களில் பேசி இருக்கிறார். இதற்காக 6 வாரங்கள் சிறையில் அடைக்கப் பட்டார்.

மூட நம்பிக்கைகளை எதிர்த்து; தேவதாசி ஒழிப்பு முறையை ஆதரித்து நாடகங்கள் நடத்தி வந்தார். ஒரு நாடகத்தின் போது, மத வெறியர்கள் அவரின் கூந்தலை அறுத்து எறிந்தார்கள். அதன் பிறகு கடைசி வரை அவர் கூந்தலை வளர்க்கவே இல்லை. தீண்டாமை, தேவதாசி முறை, குழந்தைத் திருமணம், கைம்மை நோன்பு போன்ற சமூகக் கேடுகளைத் தீவிரமாக எதிர்த்தவர். 1962 ஜுன் 27-ஆம் தேதி உயிர் நீத்தார்.

அந்த அம்மையாரிடம் அநீதியை எதிர்க்கும் ஆவேசம். பெண்ணினத்தை மீட்டு எடுக்கும் ஆவேசம். ஆண்களுக்குச் சரி சமமாகப் பெண்கள் வாழ வேண்டும் என்கிற ஆவேசம். அந்த ஆவேசங்களின் மொத்த உருவமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர் இராமாமிர்தம் அம்மையார். அவரை நினைவு கூர்வோம். அவரைப் போல ஓர் அம்மையார் மறுபடியும் நமக்கு கிடைக்கப் போவது இல்லை. கை எடுத்துக் கும்பிடுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here