தமிழ்ப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு 29.98 மில்லியன் போதாது!

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் 200 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகின்றன. தொடக்க காலங்களில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்த தோட்டப்புறங்களில் இந்தப் பள்ளிகள் நிர்மாணிக்கப்பட்டன. அதே வேளையில் தொழிலாளர் சட்டத்தின் கீழே தமிழ்ப்பள்ளிகளின் நிர்வாகம் வைக்கப்பட்டது. மேலும் தொழிலாளர் இலாகாவே தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர்களாகவும் இருந்தனர். பின்னர் ஏற்பட்ட கல்வி மாற்றங்கள் தமிழ்ப்பள்ளிகளை ஆங்கிலேயர் ஆட்சி மேம்பாடு செய்தது.
இன்றைய சூழலில் தமிழ்ப்பள்ளிகள் இயங்குவது “ரசாக் கல்வித் திட்டம்“ வழியாகத்தான் என்றால் அது மிகையாகாது.
“ரசாக் கல்வித் திட்டம்“ மலாய்ப் பள்ளிகளுக்கான திட்ட வரைவினை செய்தபோது மலாய் அல்லாத வேற்று மொழி பள்ளிகளான சீனம் மற்றும் தமிழ்ப் பள்ளிகள் அரசு விரும்பும் வரையில் இயங்குவதற்கு திட்டமும் வரையப்பட்டது.
அதே வேளையில் பதினைந்து பெற்றோர்கள் விரும்பினால் தாய்மொழி கல்வி போதிக்க முடியும் என்ற விதியும் வகுக்கப்பட்டது.
இந்த சூழலே பல ஆண்டுகள் நிலவி வந்தது. ஆனால் டத்தோஸ்ரீ நஜிப் அவர்கள் கல்வி அமைச்சராக இருந்தபோது கல்வி அமைச்சர் விரும்பினால் தமிழ்ப்பள்ளியை தேசியப் பள்ளியாக மாற்ற முடியும் என்ற விதியை அகற்றினார். இது இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளி தொடர்ந்து இயங்க உறுதியானது.
ஆனால், தமிழ்ப்பள்ளிகளின் பல்வேறு சவால்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. கட்டடங்களின் தரம் , உபரி கட்டடங்கள் , ஆசிரியர் பற்றாக்குறை , குறைவான ஒதுக்கீடு , பாலர் பள்ளி மற்றும் புதிய பள்ளி நிர்மாணிப்பு முதலான வையை குறிப்பிடலாம். இதற்கும் டத்தோஸ்ரீ நஜிப் பிரதமராக இருந்த காலத்தில் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட் டுக்காக ஒரு குழு அமைத்து அதற்கு கணிசமான நிதி ஒதுக்கீட் டையும் செய்தார். மேலும் ஆண்டு வரவு செலவு திட்டத்திலும் கணிசமான நிதி ஒதுக்கீ டுகளை தமிழ்ப்பள்ளிக்குச் செய்துள்ளார். அதே வேளையில் பக்காத்தான் ஹராப்பான் அரசும் தமிழ்ப் பள்ளிகளுக்கு கணிசமான நிதியை ஒதுக்கீடு செய்தது.
ஆனால், இன்று இந்த அரசு தமிழ்ப் பள்ளிகளுக்கு ஒதுக்கி உள்ள நிதி “ யானைப் பசிக்கு சோளப்பொறி தீனி” போன்றதாகும்.
இன்று தமிழ்ப்பளிகள் 526 என்ற எண்ணிக் கையில் உள்ளன. அதே வேளையில் புதிதாக நிர்மா ணிக்கப்பட உரிமம் கொடுக்கப்பட்ட ஏழு பள்ளிகளில் ஒரு பள்ளிதான் வெற்றிகரமாக கட்டப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இன்னும் மற்ற பள்ளிகள் கட்டப்பட வேண்டும்.
அதே வேளையில் நம் கண் முன்னே இன்று பூதாகரமாக எழுந்து நிற்பது குறைந்த மாணவர் எண்ணிக்கைக் கொண்ட பள்ளிகள் மற்றும் தனியார் நிலங்களில் அமைந்துள்ள தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளிகளாகும்.
இன்று தமிழர்கள் இருபது சதவீதம் மட்டுமே தோட்டப்புறங்களில் வாழ்கின்றனர். ஆனால், இன்று எண்பது சதவீத தமிழர்கள் புறநகர், நகர்ப்புறம், அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டுடைமைக் குடியிருப்புகள் என்று நகர்ப்புற வாசிகளாக உள்ளனர். எனவே, தமிழ்ப்பள்ளிகளின் தேவைகள் இன்று நகர்ப்புறத்தில் அடர்த்தியாக உள்ள தமிழர்களுக்கு மத்தியில் தேவையாக உள்ளது.
இதற்கு தோட்டப் புறங்களில் உள்ள பள்ளிகள் இடப்பெயர்வுகள் பெற்று நகர்ப்புறங்களில் புதிய பள்ளிகள் கட்டப்பட வேண்டும் என்ற அத்தியாவசிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தோட்டப்புறப் பள்ளிகளின் பழைய உரிமங்களுடன் நகர்ப்புறங்களில் இடப்பெயர்வு அடிப்படையில் கட்டவிருக்கும் பள்ளிகளுக்காக நில கொள்முதல் செய்யப்பட வேண்டும். இதற்கு தனியான நிதி தேவைப்படுகின்றது. அதே வேளையில், கட்டட நிர்மாணிப்பு மற்றும் தளவாடப் பொருட்களுக்கான நிதி என்றும் தேவைப்படுகின்றது.
இவை யாவும் நிறைவேற்றுவதற்கு இன்று ஒதுக்கப்பட்டுள்ள வெ. 29.98 மில்லியன் நிச்சயம் ஏற்புடையதாக இருக்காது. இது நிச்சயமாக பற்றாக்குறையானதே.
இந்த இடப்பெயர்வும் தமிழர்கள் அடர்த்தியாக வாழுமிடங்களில் நிர்மாணிக்கப்படும் பள்ளிகள் குறைந்த மாணவர் எண்ணிக்கையுடன் இயங்கும் பள்ளிகள் என்ற பிரச்சினையை தீர்க்கும். அதே வேளையில், இந்திய சமூகம் தங்கள்
பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பும் சிரமத்தையும் குறைக்கும் என்பது திண்ணம். தமிழ்ப்பள்ளிகளின் தொடர்ச்சிக்கு அரசு ஒதுக்கீடுகள் உதவும் என்பதை நம்புவோமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here