தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவித்து மறுமலர்ச்சிக்கு வித்திட்டது ஓம்ஸ் அறவாரியம்

இன்று சிலாங்கூர் மாநில முழுவதும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் சிறப்புத் தேர்ச்சி கண்டுள்ளார்கள் என்றால் அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒரு காரணமாக இருக்கும் அதே வேளையில் ஓம்ஸ் அறவாரியமும் மிகப்பெரிய பலமாக இருந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் க.முருகன் தெரிவித்தார்.
நேற்று செர்டாங் மேம்ப்ஸ் மாநாட்டு மண்டபத்தில் ஓம்ஸ் அறவாரியத்தின் ஏற்பாட்டிலும் சிலாங்கூர் மாநில கல்வி இலாகா மற்றும் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டிலும் நடைபெற்ற யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கான தங்கப் பதக்கம் அணிவிப்பு நிகழ்வில் தலைமையுரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
நான் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி அமைப்பாளராக இருக்கும் காலகட்டத்தில் அதாவது 1999ஆம் ஆண்டு யூ.பி.எஸ்.ஆர். தேர்வின் அடைவுநிலை மிகவும் அவல நிலைக்குள்ளாகி இருந்தது. மொத்தமாக 15.5 விழுக்காட்டு தேர்ச்சியும், அதில் 6 மாணவர்கள் மட்டுமே 7 ஏ பெற்று சிறப்புத் தேர்ச்சி அடைவினை கொண்டிருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இத்தகைய அவல நிலையை போக்கும் வண்ணம் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மனங்களிலேயே ஏற்படுத்திய சிந்தனை புரட்சியே சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி அடைவுநிலையினை உயர்த்துவதாகும். அன்று வித்திட்ட இந்த அரிய முயற்சி இன்று விருட்சமாக வளர்ந்து கடந்தாண்டு யூ.பி.எஸ்.ஆர். அடைவுநிலை 66.6 விழுக்காட்டினை தொட்டுள்ள சாதனையை தாம் இங்கு பதிவு செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த காலகட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளின் அடைவுநிலையை உயர்த்துவதற்கு கவர்ச்சிகரமான திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதுவே ஓம்ஸ் அறவாரியத்தின் தங்கப் பதக்க அன்பளிப்பாகும். மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை ஊக்குவிப்பு கருவியாகப் பயன்படுத்தி கடந்த 14 ஆண்டுகளாக ஓம்ஸ் அறவாரியம் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்த் தொடக்கப் பள்ளிகளில் யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் அணிவித்து கௌரவித்து வந்தது.
இந்த மாணவர்களின் வெற்றியும், கௌரவிப்பும் மற்ற மாணவர்களுக்கு மிகப்பெரிய உந்துதலை ஏற்படுத்தியது. அதுவே இன்றைய இந்த தேர்ச்சி உயர்வு நிலைக்கு காரணமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்திய அரசாங்கத்தின் ஆதரவு இருக்கும் வரையில் ஆண்டுதோறும் இது போன்ற தரமான நிகழ்ச்சியை மேற்கொள்வதில் ஓம்ஸ் அறவாரியம் பெருமைக் கொள்கிறது. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைகளை வானளாவ உயர்த்திக் காட்ட இதுபோன்ற நிகழ்ச்சிகள் பெருமளவில் கை கொடுக்கும் என்று தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஓம்ஸ் அறவாரிய தங்கப் பதக்க விழாக்குழு தலைவருமான முருகன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவரும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாகி டத்தோ ப.சகாதேவன், முன்னாள் சுகாதார துணையமைச்சர் டான்ஸ்ரீ க.குமரன், மலாயாப் பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர் டத்தோ டாக்டர் டேனியல் வோங், தொழில்திறன் மேம்பாட்டு நிதியகத் தலைவரும், தமிழ்மலர் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி, ஓம்ஸ் அறவாரியத் துணைத் தலைவர் திலகன், செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜனின் துணைவியார் சந்திராதேவி தியாகராஜன், டத்தோஸ்ரீ அன்வாரின் இந்திய நல சிறப்பு அதிகாரி பிகேஆர் சுரேஷ்குமார், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் ஜோன் போஸ்கோ அந்தோணி, இந்திய தூதரகத்தைச் சேர்ந்த ஐயனார், சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு உள்ளிட்ட பிரமுகர்களும் திரளான மாணவச் செல்வங்களும் பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 8 =