தமிழ்ப்பள்ளி தங்கப்பதக்க விழா தொடர அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்

யூபிஎஸ்ஆரில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களை கௌரவிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்வதாக ஓம்ஸ் அறவாரியத் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா. தியாகராஜன் கூறினார்.
இவ்விழா அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் சிறப்பாக நடைபெற அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்றார் அவர்.
கடந்த ஜனவரி 5ஆம் தேதி நடைபெற்ற இவ்விழாவில் கலந்துகொண்ட மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் பார்த்ததில் அவ்விழாவின் சிறப்பு பிரமுகரும் கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவரும் வருங்கால பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
அரசியல்வாதி பட்டாளம் இல்லாமல் மாணவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்ட இவ்விழா தன்னை மிகவும் கவர்ந்ததாக அன்வார் கூறினார் என ஓம்ஸ் தியாகராஜன் தெரிவித்தார்.


இவ்விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தவர்களுக்கு நேற்று முன்தினம் கிள்ளானில் நடத்தப்பட்ட நன்றி விருந்து உபசரிப்பில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
அவரைப் போலவே சிலாங்கூர் மாநில கல்வி இலாகா இயக்குநரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதனை முறையாகவும் சரியாகவும் நடத்த மூன்று மாத காலம் திட்டம் வகுத்து நடத்த உதவிய அனைவரையும் அவர் பாராட்டினார்.
இந்த விழாவிற்கு அனைத்து தரப்பிலிருந்தும் பேராதரவு நல்கிய சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்களுக்கும் ஏறக்குறைய 40 ஆசிரியர்களின் ஆதரவுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த விழா சிறப்பாக நடைபெற்றதைத் தொடர்ந்து தற்போது மலாக்கா, கூட்டரசுப் பிரதேசம் மற்றும் கெடாவிலும் நடத்த வேண்டுமென கோரிக்கை வந்துள்ளது.
அங்கும் விரைவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என ஓம்ஸ் தியாகராஜன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மன்றத் தலைவர் ஜோன் போஸ்கோ தமது உரையில், தமிழ்ப்பள்ளிக்கு மாணவர்களை அனுப்பவது மட்டுமின்றி அவர்களை கண்காணிப்பதிலும் நிறைவான ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். அதனை உணர்ந்து அதற்கு ஏற்ப செயல்பட்டு வரும் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜனின் பணிக்கு நன்றி பாராட்டுவதாக அவர் கூறினார்.


அது மட்டுமின்றி இது போன்ற பணிக்கு தலைமையாசிரியர் மன்றம் என்றுமே உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
இதே நிகழ்ச்சியில் பேசிய தமிழ்மலர் நிர்வாக இயக்குநர் டத்தோ எஸ்.எம்.பெரியசாமி, இவ்விழாவின்போது தாம் நேப்பாளத்தில் இருந்ததால் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இருப்பினும் அதன் நடப்பை நேரடி ஒளிபரப்பு மூலமாக காண முடிந்ததாக கூறிய அவர், அதனை ஏற்பாடு செய்து ஒளியேற்றிய தரப்பினருக்கும் நன்றி பாராட்டினார்.
நிகழ்ச்சி தொடக்கத்தில் சிலாங்கூர் மாநில முன்னாள் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் கா. முருகன் அனைவரையும் வரவேற்று நன்றி கூறினார்.


இந்நிகழ்ச்சிக்கு தமிழகத்திலிருந்து மூன்று பிரமுகர்களுடன் சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர் நாகலிங்கம், ஓம்ஸ் அறவாரிய துணைத் தலைவர் திலகன், தொழிலதிபர் ஆர்.சி. ராமச்சந்திரன், பூச்சோங் முரளி, முரசு இளவரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நினைவுச் சின்னமும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − six =