
தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி மொழியை படித்துக் கொடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றவர்கள் தற்பெருமை கொண்ட முட்டாள்கள் (போடோ சொம்போங்) என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக் கடுமையாகச் சாடியுள்ளார். அடுத்தாண்டு 4ஆம் வகுப்பில் இருந்து ஜாவியைப் படித்துக் கொடுக்கும் அரசாங்கத்தின் முடிவை ஒத்திவைக்காவிட்டால் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பவேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொள்வோம் என ’செக்காட் எனப்படும் ’செனி காட் நடவடிக்கைக் குழு கூறியிருப்பதை மேற்கோள் காட்டி அவர் பேசினார்.
மூன்று பக்கங்களில் மட்டும்தான் ஜாவி இருக்கிறது. மேலும் அதற்குத் தேர்வு கிடையாது. அது விருப்பப்பாடம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இப்படி இருந்தும் பிள்ளைகளின் கல்வியைத் தடுப்பது சரியா? இதைவிட ஒரு முட்டாள்தனமான தற்பெருமை ஏதுமில்லை என்று அவர் சொன்னார்.
அடுத்தாண்டு இந்த ஜாவி பாடத்தை தமிழ் – சீனப்பள்ளிகளில் அறிமுகப்படுத்துவதற்கு முன் அரசாங்கம் நிறைய பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும் என செக்காட் செயலாளர் அருண் துரைசாமி கேட்டுக் கொண்டார்.
அப்படி தங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பவேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொள்வோம் என்று அவர் கூறியிருந்தார்.
இதனிடையே சாடிக்கின் இந்த கருத்து வலைத்தளங்களில் கடுமையான கண்டனத்துக்கு இலக்காகி இருக்கிறது. அவரது பேச்சு முறையற்றது என்று ஒருவர் கூறினார். இது பற்றி விவாதிக்கவும் கலந்து பேசவும் விளக்கம் சொல்லவும்தான் அவர்கள் கோருகிறார்கள். அவர்கள் இந்நாட்டின் பிரஜைகள். அவர்களைப் பார்த்து முட்டாள்கள் என்பதா என்று பலர் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.