“தமிழுக்கும், தன்மானத்திற்கும் முக்கியம் கொடுத்து, பதவியிலிருந்து விலகினேன்” – தெய்வீகன்

0

கோலாலம்பூர் – தமிழ்ப் பள்ளிகளில் “காட்” எனப்படும் அரேபிய வனப்பெழுத்து (ஜாவி) தேசிய மொழிவழியாக பயிற்றுவிக்கும் கல்வி அமைச்சின் முன்னெடுப்பிலும், அணுகுமுறையிலும் தமக்கு உடன்பாடு இல்லாத காரணத்தினாலும், தமிழ்மொழிக் காப்பகக் குடையின் கீழ் தேசியத் தலைவராக இருக்கும் துணை அமைச்சருக்கும், துணைத்தலைவராகிய தமக்கும் இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தின்மையாலும், தமிழ் காப்பகத்தின் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகுவதாக டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன் அறிவித்தார்.

“அமைச்சின் கீழ், மூன்று மாதங்களாக, அதன் அரவணைப்பில் செயல்படுவதாக நம்பப்படும் மலேசிய தமிழ்மொழிக் காப்பகத்திற்கு இன்னும் எவ்வித நியமன கடிதமும் கிடைக்காத சூழ்நிலையில், அதன் துணைத்தலைவரின் ஒத்துழையாமையும், முற்றிலும் முரண்பாடான போக்கும் காப்பகத்திற்கும் சாதகமாக இருக்காது. அதேவேளையில், காப்பக செயலவை உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கல்வி அமைச்சின் அதிகாரிகளாகவும், அரசு அதிகாரிகளாகவும் இருப்பதினால், அவர்களையும் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்காமல் இருப்பதற்கும், தாம் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது” என மலேசியக் காவல் துறையில் முன்னாள் ஆணையரான தெய்வீகன் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறினார்.

“தமிழ் காப்பகத்தின் துணைத்தலைவர் பதவியைவிட, தாம் உயிரைப்போல் நேசிக்கும் தாய்த் தமிழும், தமிழ்க் கல்வியும், தமிழ் மொழிக்காப்பகமும்தான் முக்கியம்” என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here